×

2 ஆண்டுக்கு முன் தனியார் ஓட்டலில் நடந்தது தாலிக்கு தங்கம் வழங்குவதுபோல தீவுத்திடலில் நிச்சயதார்த்த போட்டோ: குடும்பத்தினர் அதிர்ச்சி

சென்னை: தனியார் ஓட்டலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை, தாலிக்கு தங்கம் வழங்குவது போல் தீவுத்திடலில் சமூக நலத்துறை சார்பில் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக் கோரி குடும்பத்தினர் அதிகாரிகளிடம் கூறியும்  அதிகாரிகள் அகற்றாமல் மெத்தனமாக உள்ளனர்.  சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலா கழகம் சார்பில் பொருட்காட்சி நடத்துவது வழக்கம். இதில் காவல்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வாரியம், தீயணைப்பு துறை, சமூக நலத்துறை, இந்து அறநிலையத்துறை என பல துறைகள் சார்பில் அரங்குகள் அமைப்பது வழக்கம்.அப்படி சமூக நலத்துறை சார்பில் பெண்கள் திருமண உதவித் திட்டம் குறித்து விளக்கும் விதமாக அதன் அரங்கில் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்படி வைக்கப்பட்டுள்ள படங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஓட்டலில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பாண்டிச்சேரியை சேர்ந்த திரிபுரசுந்தரி என்ற பெண்ணுடன் சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த அருண் என்பவரின் போட்டோவும் இடம்பெற்றுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் போட்டோக்களை பயன்படுத்தியுள்ளனர். இதில் பெண், மாப்பிள்ளை தவிர  குடும்ப உறுப்பினர்களின்  அனைவரின் படங்களையும் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவருடைய உறவினர் மயிலாப்பூரை சேர்ந்த பாஸ்கர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த படங்களை எடுக்க கோரி உள்ளார். ஆனால் அவர்கள் அதை எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளனர். இதனால் அந்த குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு அரசு அமைக்கும் இந்த அரங்கில் தாலிக்கு தங்கம் வழங்கும்  திட்டத்தில் வைக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் எப்படி சரியான புகைப்படத்தை வைக்காமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் நடந்த ஒரு நிச்சயதார்த்த புகைப்படத்தை வைத்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதற்கு சமூக நலத்துறையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் என்ன பதில் கூறுகிறார்கள் என பொதுமக்களும்,  சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Tags : cafe ,Thali Tali ,island , Tali, like gold, on the island, engagement photo, family, shock
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...