×

பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தம் பட்டியலில் டோனி இல்லை

மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் எம்எஸ் டோனி பெயர் இடம் பெறாதது அவரின் எதிர்காலம் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் பெறும் ஏ-பிளஸ் பிரிவில் கேப்டன் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் தொடருகின்றனர். அதேபோல் ஆண்டுக்கு ரூ.5கோடி ஊதியம் பெறும் ஏ பிரிவில் ஆர்.அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, ரகானே, ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர். பி பிரிவில்  இருந்த லோகேஷ் ராகுல் இப்போது ஏ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆண்டுக்கு ரூ.3கோடி ஊதியம் வாங்கும் பி பிரிவில் விருத்திமான் சஹா, யஜ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் கிடைக்கும் சி பிரிவில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், மணீஷ் பாண்டே, ஹனுமா விகாரி, ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதுவரை ஏ பிரிவில் இருந்த முன்னாள் கேப்டன் டோனி இப்போது ஒப்பந்த பட்டியலில் இடம் பெறாதது பல்வேறு தரப்பினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை போட்டியில் ஜூலை 9ம் தேதி நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இப்போது பிசிசிஐ வெளியிப்பட்ட ஒப்பந்த பட்டியல் அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான ஓராண்டுக்கானது. இந்த ஆண்டு ஜூலையில் டி20 உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் டோனியின் ஒப்பந்தம் புதுப்பிக்காதது அவர் இனி இந்திய அணியில் இடம் பெறுவரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதற்கு ஏற்ப இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், ‘டோனி உட்பட யாராக இருந்தாலும் அவர்களது திறமையை வெளிப்படுத்தியதின் அடிப்படையில்தான் அணியில் இடம் கிடைக்கும்’ என்று தெளிபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடிக்கும் டோனி ஐபிஎல் டி20 போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பதை பொறுத்து அணிக்கு திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் நீட்டிக்காதது அந்த வாய்ப்பையும் குறைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. டோனி தலைமையிலான இந்திய அணி 2007ல் டி20, 2011ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. டோனியை போலவே ஒப்பந்தப்பட்டியலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் இல்லை.

Tags : BCCI ,Tony , BCCI, Annual Contract, List, Tony, no
× RELATED அணியின் நலனுக்காக புதிய...