×

உலக வர்த்தக போர் முடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா இடையே முதல் ஒப்பந்தம் கையெழுத்து: ஆசிய சந்தையில் பங்கு விற்பனை உயர்வு

வாஷிங்டன்: அமெரிக்கா-சீனா இடையே கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாடுகள் இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் வாஷிங்டனில் நேற்று கையெழுத்தானது.
பொருளாதாரத்தில்  வல்லரசு நாடுகளாக திகழும் அமெரிக்கா-சீனா இடையே கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நிலவி  வந்தது. இரு நாடுகளும் பல்வேறு பொருட்களுக்கு ரூ.35 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதி வரியை பல மடங்காக உயர்த்தின. இதனால், இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் ஸ்தம்பித்தது. இது உலகளவிலும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பிரச்னையை தீர்க்க இரு  நாடுகளும் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று கையெழுத்தானது.

வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சிறப்பு  நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், சீன துணை பிரதமர் லியூ ஹீயும்  கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் இடையேயான வர்த்தக  பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அமெரிக்க வேளாண் பொருட்கள் உட்பட இதர ஏற்றுமதிகளை சீனா 2 ஆண்டுகளுக்கு வாங்கும் என்றும், அமெரிக்க தொழில்நுட்பம் பாதுகாக்கப்படும் என்றும், இதில் விதிமுறை மீறல் நடந்தால் அமெரிக்கா அபராதம் விதிப்பதற்கும் சீனா ஒப்புக் கொண்டது. பதிலுக்கு, சீன தயாரிப்பு பொருட்கள் சிலவற்றுக்கான வரியை அமெரிக்கா குறைத்தது.  இன்னும் சில பொருட்களுக்கு 2ம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்குப்பின் வரி குறைக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே இந்த ஒப்பந்தம்  கையெழுத்தானதை அடுத்து ஆசிய சந்தைகளில் நேற்று பங்குகள் விற்பனை அதிகரித்தது. எனவே பங்கு சந்தையில் சற்று உயர்வு காணப்பட்டது.

Tags : US ,China World Trade War Concludes US-China Signs First Agreement , World Trade War, Decision, United States - China, First Deal, Signature
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...