×

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர்

சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரில் பொங்கல் விழாவை கொண்டாடினார். பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 14ம் தேதி சேலம் வந்தார். நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில், மனைவி ராதா, மகன் மிதுன்குமார் ஆகியோருடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். குடும்பத்தினர் வைத்த பொங்கலை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு சொந்தமான முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பசுக்களுக்கு பழங்களை வழங்கினார்.

பின்னர், பானை உடைக்கும் போட்டியில் பங்கேற்றார். இதையடுத்து அங்கு நடந்த கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளை கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுடன் கண்டுகளித்தார். பின்னர், மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் இருந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார். நேற்று காலை பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மாலையில் கார் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

Tags : first ,Pongal ,hometown ,CM , Hometown, Pongal celebrated, CM
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...