×

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவால் இந்தியாவில் சென்செக்ஸ் 42,000 புள்ளிகள் உச்சம்

டெல்லி: அமெரிக்கா-சீனா இடையே கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்ததால் இன்று இந்திய சென்செக்ஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதுவரை இல்லாத அளவில் உச்சமான 42,000 புள்ளிகளைத் தொட்டது. உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தகப் போர் நிலவி வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டே சீனாவின் வணிகக் கொள்கைகளைக் கடுமையாக கண்டித்துள்ளார். சீன நிறுவனங்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிக நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போலி செய்கின்றன. உரிமம் இன்றி அமெரிக்க மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. வணிக ரகசியங்களை களவாடுகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.  மேலும் சீனா பல பொருட்களை குறைந்த விலையில் அமெரிக்கச் சந்தையில் விற்கிறது. இதனால் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்தார்.  எனவே  அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு 5 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் வரிகளை விதித்தார். இதேபோல் சீனாவும் பதில் நடவடிக்கை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து இருநாடுகளும் மாறி மாறி கூடுதல் வரிகளை விதித்தன.

இதனால் இருநாடுகளும் பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் பின்னடவை சந்தித்தன. இரு பெரிய நாடுகளின் வர்த்தக போர் உலகளவிலான பொருளாதாரத்திலும் எதிரொலியை ஏற்படுத்தியது. சீனாவைப் போலவே இந்தியப் பொருட்கள் மீதும் அமெரிக்கா கூடுதல் வரி விதித்திருந்தது. இந்தியாவும் பதிலுக்கு அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்கா-சீனா ஒப்புக்கொண்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் நேற்று  கையெழுத்தானது. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க- சீன உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் - சீன துணை அதிபா் லீயு ஹீ ஆகிய இருவரும் முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் அமெரிக்கா- சீனா இடையே நீடித்து வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. அப்போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்ப் இவ்வளவு எளிதாகவும், சீக்கிரமாகவும், வர்த்தகப் போர் விவகாரம் முடிவுக்கு வரும் என என்னால் நம்ப முடியவில்லை. கடந்தகால தவறுகள் களையப்படுவதன் மூலம் அமெரிக்க தொழிலாளர்கள், வேளாண் பெருங்குடி மக்களுக்கு, பொருளாதார நீதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க வழி ஏற்பட்டிருக்கும் என்று டிரம்ப் கூறினார்.

இதனால் சில வரிகள் திரும்பப் பெறப்படும். மேலும் 2 ஆண்டுகளில் அமெரிக்க பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்முதலை 200 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் 14 லட்சம் கோடி) சீனா உயர்த்தும். அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு இன்று இந்தியாவில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் இதுவரை இல்லாத அளவில் 42,000 புள்ளிகளைத் தொட்டது. இருப்பினும் பல இடைவிடாத பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்ததால் நிதி சந்தைகள் எச்சரிக்கையாக இருந்தன.

நேற்று  மாலை சென்செக்ஸ் 41,872 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,924 புள்ளிகளுடன் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் அதிகபட்சமாக 42,059 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் அடுத்த அரை மணி நேரத்துக்குள் சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கியது. பின் 41,932 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்தது. அதே போல் இன்று காலை நிஃப்டி 12,347 புள்ளிகளில் தொடங்கி, 12,355 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.96 ரூபாயாக இருந்தது.

Tags : India , US-China, Trade War, India, Sensex, 42,000 points, peak
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!