×

குமரியில் பொங்கல் விழா கோலாகலம் சுற்றுலாத்தலங்களில் போலீஸ் குவிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடருகிறது.  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தது. வீடுகளிலும், கோயில்களிலும், அலுவலகங்களிலும் மக்கள் பொங்கலிட்டு பண்டிகையை கொண்டாடினர். பொங்கல் பண்டிகை நாளில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பள்ளி மாணவ மாணவியரும், உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் கொண்டாடுவதற்காக வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள், குமரி மாவட்டத்துக்கு வர வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல் பொங்கல் விடுமுறை முடிந்து செல்ல வசதியாகவும் சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு 120 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) ராஜராஜன் உத்தரவின் பேரில் சுமார் 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு  பகுதிகளில் வீடுகளில் வளர்த்து வருகின்ற மாடுகளை குளிப்பாட்டி அவற்றை அலங்காரம் செய்து பொங்கல் வைத்து மாடுகளுக்கும் உணவளித்து மக்கள் மாட்டுப்பொங்கலையும் கொண்டாடி வருகின்றனர்.தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்கள் வெளிமாவட்டம், வெளி மாநிலம் மற்றும் உள் மாவட்ட சுற்றுலா பயணிகளால் களைகட்டியுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சபரிமலையில் மகரவிளக்கு பார்த்துவிட்டு திரும்பிய பக்தர்கள் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கன்னியாகுமரி நோக்கி சென்ற வண்ணம் உள்ளன.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாதலங்கள் கன்னியாகுமரி மட்டுமின்றி வட்டக்கோட்டை, முட்டம், குளச்சல், பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



Tags : Pongal Festival ,Kumari Kumari , Pongal,Festival , Kumari
× RELATED பவானி அருகே கோலாகலம்: மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா