×

பழநியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்: பொதுமக்கள் அவதி

பழநி: பழநியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள பகுதிகளில் சில தினங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. அப்பகுதியில்  உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகங்களில் வசித்து வரும் குரங்கு கூட்டம் அருகில் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. வீடுகளில் காய வைக்கப்பட்டிருக்கும் துணிகளை எறிவது, பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற அட்டகாசங்களில் அவை ஈடுபடுகின்றன. குழந்தைகள் மற்றும் முதியவர்களை விரட்டுவதால், பயந்து ஓடி கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளை கடப்பதால் வாகன ஓட்டிகளும் கீழே விழும் நிலை ஏற்படுகிறது. பழநி கோயிலில் சுற்றி திரிந்து வந்த குரங்குகள் வனத்துறையால், பிடிக்கப்பட்டு பழநி வனப்பகுதிக்குள் விடப்பட்டன. அவற்றுள் சில தப்பி வந்து நகர்பகுதிக்குள் சுற்றித் திரிந்து வருகின்றன. எனவே, வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து நகரில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : civilians , Monkeys,attacking , colonies,civilians
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை