×

முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் மிக நெருங்கிய நண்பருமான டாக்டர். பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன்.முன்னாள் நீதியரசரின் மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி, பிறகு பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய டாக்டர். கோகுலகிருஷ்ணன் குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். அம்மாநிலத்தின் ஆளுநராக இருமுறை பொறுப்பு வகித்தவர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறும் போது அவரது நேர்மையையும், திறமையையும் பாராட்டி அம்மாநில அமைச்சரவையே பிரிவு உபசார விழா நடத்தியது தமிழகத்திற்குக் கிடைத்த தனிப் பெருமையாக அமைந்தது.நீதி பரிபாலனத்தில் நடுநிலை தவறாமல் சாமானியர்களுக்கும் நீதி வழங்கிய அவர் ஓய்வு பெற்ற பிறகு, ‘கோவை கலவரம்’ தொடர்பான விசாரணைக் கமிஷனின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூக மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் முக்கிய அறிக்கையைத் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு அளித்தவர்.முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ நூலின் ஆறாம் பாகத்தை வெளியிட்ட அவர்- தலைவர் அவர்கள் மறைந்த போது ‘நீதியரசர்களின் நினைவேந்தல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தியவர்.சட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி, சமூக நலப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவராக விளங்கிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : BR Gokulakrishnan ,Supreme Court ,MK Stalin ,demise ,death , Former Supreme Court ,Chief Justice, BR Gokulakrishnan's death, MK Stalin's condolences
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...