×

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி 1000 கலைஞர்கள் இசையஞ்சலி

திருவையாறு: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் நேற்று காலை பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டது. இதில் 1000க்கும்மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 173வது ஆராதனை விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. விழாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து தினம்தோறும்  காலை 9 மணி முதல்  இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடந்தது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்டமாநிலங்களை சேர்ந்த பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நேற்று காலை நடந்தது.  காலை 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். இதில் பாடகிகள் மகதி,  சுதா ரகுநாதன்,  உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பாடினர். இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். முன்னதாக தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து தியாகராஜர் சிலை ஊர்வலமாக உஞ்சவர்த்தனி பஜனையுடன் புறப்பட்டு காவிரி கரையில் தியாகராஜர் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த விழா பந்தலை அடைந்ததும் தியாகராஜர் சிலைக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.அதைதொடர்ந்து இசைநிகழ்ச்சி நடந்தது.  இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லகில் தியாகராஜர் வீதியுலா நடந்தது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.

Tags : Thiruvaiyaru Thiyagarajar Adoration Ceremony ,1000 Artists Singing Pancharatna Kirtans ,worship ceremony ,Thiruvaiyaru Thiyagarajar , Thiruvaiyaru ,Thiyagarajar, worship ceremony, closes
× RELATED தியாகராஜர் ஆராதனை விழா