ஆதிவாசி பெண்களுக்கு பாலியல் தொல்லை விடுதி மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: நீலகிரி அருகே பரபரப்பு

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தனியார் தங்கும் விடுதியின் கண்ணாடி சன்னல்களை உடைத்து, விடுதியின் நடவடிக்கையை கண்டித்து சுவரொட்டி ஒட்டி சென்ற மாவோயிஸ்ட்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாலக்காடு அருகே கேரளா போலீசார் வனப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்டுகளை துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றனர். அதன்பின் கேரளா மற்றும் தமிழக போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் அடுத்துள்ள கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி காவல்நிலையத்திற்குட்பட்ட அட்டமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள் வந்துள்ளனர். விடுதியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அங்கிருந்த கேபிள் ஒயர்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இதை கண்ட விடுதி பணியாளர்கள் பயத்தில் வெளியே வராமல் உள்ளேயே பதுங்கி கொண்டனர். பின்னர் விடுதி உரிமையாளருக்கு எதிராக அங்கு சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர். சுவரொட்டிகளில், விடுதி வழியாக செல்லும் ஆதிவாசி பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி, அவர்களை விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுக்கும் மாபியாக்களை கண்டிக்கிறோம் என்றும், ஆதிவாசி மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக போராடுவதாகவும் சுவரொட்டிகளில் மலையாளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.தகவலறிந்த கேரள போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மாவோயிஸ்டுகள் கபிணி தளம் மற்றும் பவானி, சிறுவாணி, வராகினி, நாடுகாணி என ஐந்து தளங்களாக பிரித்து செயல்பட்டு வருகின்றனர். இதில் விடுதி மீது தாக்குதல் நடத்தி சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் நாடுகாணி தளம் என தெரிய வந்துள்ளது.இச்சம்பவத்தை தொடர்ந்து மாவோயிஸ்ட்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை துவங்கியுள்ளது. கேரளா மற்றும் தமிழக போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தமிழக எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்ட்கள் தாக்குதல் மற்றும் சுவரொட்டி ஒட்டி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: