×

கூட்டணியை விட்டு காங். வெளியேறினாலும் திமுகவுக்கு பாதிப்பில்லை: துரைமுருகன் பேட்டி

வேலூர்: பொங்கல் பண்டிகையையொட்டி திமுக சார்பில் மக்கள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. திமுக பொருளாளர் துரைமுருகன், வேலூர் எம்பி கதிர்ஆனந்த், கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஆர்.காந்தி, வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பதாக கூறி பணத்தை அவர்களே எடுத்துக்கொள்வார்கள். இதற்காகத்தான் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர். அதேபோல ஏரிகளை தூர்வாருகிறோம் என்று கூறி, விவசாயிகளை ஏரி மண்ணை எடுத்துக்கொள்ள சொன்னார்கள். தற்போது தூர்வாரியதாக அதற்கும் பில் போட்டு பணத்தை எடுத்துக்கொண்டனர்.

அதிமுக ஆட்சியில் தான் லஞ்ச லாவண்யம் அதிகமாக தலைவிரித்தாடுகிறது. திமுக கூட்டணியில் ஒரு தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். யாரையும் நாங்களாக வெளியேற்றுவது இல்லை என்பது தான் அது. அதற்காக அவர்களாக போனால், போகாதே, போகாதே என் கணவா என்று ஒப்பாரி வைக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. எங்கள் அணியில் இதுவரை எத்தனையோ பேர் இருந்துள்ளனர், வெளியேறியும் உள்ளனர். அதற்காக திமுக எப்போதும் வருத்தப்பட்டதில்லை. காங்கிரஸ் விலகிச்சென்றால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அவர்களுக்கு ஓட்டு வங்கி என்று இருந்தால் தானே பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Tags : coalition ,Kang ,Duraimurugan ,Dimukku ,Exit ,interview , Kang left ,coalition. Dimukku ,not affected, Duraimurugan interview
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...