×

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் அதிரடி கைது தவறு யார் செய்தாலும் தண்டனை உறுதி ஈரான் அதிபர்

டெஹ்ரான் : ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி கடந்த 8-ந் தேதி உக்ரைன் இன்டர்நே‌‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானம் (பி.எஸ்.752) புறப்பட்டு சென்றது. ஆனால் புறப்பட்ட  சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஈரான் மற்றும் கனடா நாட்டினர் ஆவர். ஆனால் விமானம் விழுந்து விபத்துதானா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.

இந்த விபத்து  நடந்த பின் 3 நாட்களாக, உக்ரைன் விமானம் படைகளால் சுட்டு வீழ்த்தப்படவில்லை, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விழுந்து நொறுங்கியது என்று ஈரான் கூறி வந்தது. ஆனால் 3 நாட்களுக்கு பின்னர், திடீர் திருப்பம் ஏற்பட்டது. உக்ரைன் விமானத்தை நாங்கள்தான் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டோம் என ஈரான் ராணுவம் அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானியர்கள் என்பதால், உள்நாட்டு மக்கள் கொந்தளித்தார்கள். அதிபர் ஹசன் ரூஹானி அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.



இந்த நிலையில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை ஈரான் அரசு செய்தி தொடர்பாளர் குலாம் உசேன் இஸ்மாயிலி தெரிவித்தார். ஆனால் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் யார்,யார் என்பது குறித்து  தகவல்கள் எதையும் அவர்  வெளியிடவில்லை.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக டெஹ்ரானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இது ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி டெலிவி‌‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.

இந்த சம்பவத்தில் எந்தவொரு மட்டத்திலும், தவறுதலாக அல்லது அலட்சியமாக நடந்து கொண்ட எவரும் நீதியை எதிர்கொள்வது நமது மக்களுக்கு முக்கியமானது. உயர்நீதிபதிகளையும், வல்லுனர்களையும் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை நீதித்துறை அமைக்க வேண்டும்.இதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்துக்கொண்டிருக்கிறது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு காரணமான ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டும். என ஈரான் அதிபர்  தெரிவித்தார்.



Tags : President ,Iranian ,Ukraine ,crash ,Rouhani , Rouhani ,punished,plane crash,Iran
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...