×

ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ரெய்டு: கூடுதல் கட்டணம் வசூலித்த 10 பேருந்துகள் பறிமுதல்

கோவை: கோவையில் ஆம்னி பேருந்துகளில் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் நடத்திய ரெய்டில் கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்கள் காரணமாக 10 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவையில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த மூன்று நாட்களாக ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதனை பயன்படுத்தி சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், அனுமதிச்சீட்டு, வரி செலுத்தாமல் இயக்கப்படும் பேருந்துகள், முறைகேடாக பயன்படுத்தும் பள்ளி பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோவை போக்குவரத்து இணை ஆணையர் உமா சக்தி உத்தரவிட்டார். மேலும், சோதனையின்போது அதிக கட்டணம் வசூலிக்கும் மற்றும் அனுமதி சீட்டு இல்லாத ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செலுத்தப்பட்ட வரியின் உண்மை தன்மை சரிபார்த்த பின்புதான் வாகனத்தை தொடர்ந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். மேலும், பேருந்துகளில் ஜனவரி 11ம் தேதி முதல் வரும் 21ம் தேதி வரை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தலைமையில் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்ய 7 சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், குழுவிற்கு 3 பேர் என 21 பேர் உள்ளனர். இந்த குழுவினர் கடந்த 3 நாட்களாக ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தினர். சுமார் 84 ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், 10 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதும், வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் அதிகம் வந்தது. இது தொடர்பாக தனி குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், கூடுதல் கட்டணம் வசூலித்தல், வரி செலுத்தாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், அபராத தொகை செலுத்திய 8 பேருந்துகள் இன்று (நேற்று) விடுவிக்கப்பட்டன. முறையாக வரி செலுத்தாத 2 பேருந்துகள் விடுவிக்கப்படவில்லை. இந்த ரெய்டு மூலமாக ரூ.70 ஆயிரம் வரை பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை, மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் அதிகளவில் புகார்கள் வருகிறது. சிறப்பு குழுவினர் வரும் 21ம் தேதி வரை பேருந்துகளில் ஆய்வு நடத்தவுள்ளனர். இவ்வாறு  வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Omni , raid ,Omni buses, extra charge
× RELATED திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...