×

குடியுரிமை சட்ட எதிர்ப்பு விவகாரம் போராட்டம் நடத்தக்கூடாது என்று சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது?: போலீசாரிடம் நீதிபதி சரமாரி கேள்வி

புதுடெல்லி: குடியுரிமை சட்டத்தை கண்டித்து பேரணி நடத்தியதால் கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யாத டெல்லி போலீசாரிடம் பெண் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். டெல்லியில் ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை கடந்த மாதம் 20ம் தேதி தடையை மீறி பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேரணி நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், ஆசாத்துக்கு எதிராக போலீஸ் எப்ஐஆரில் தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காமினி லா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, டெல்லி போலீசாரிடம் நீதிபதி கடுமையாக கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லாததால்தான் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். நம் எண்ணங்களை வெளிப்படுத்த நமக்கு முழு உரிமை உண்டு. ஜும்மா மசூதி ஏதோ பாகிஸ்தானில் இருப்பதை போல போலீசார் நடந்து கொள்கிறார்கள். அப்படியே அது பாகிஸ்தானில் இருந்தாலும் அங்கு சென்றும் போராட்டம் நடத்தலாம். ஏனென்றால் பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததுதான் பாகிஸ்தான்.

ஏன் மசூதி முன்பாக போராட்டம் நடத்தக்கூடாதா? அதற்கு ஏன் போலீசார் தடை விதிக்க வேண்டும். 144 தடை உத்தரவே கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என நீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது. அதை, மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. மசூதி முன்பாக கூடுவது தடை செய்யப்பட்டது என சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது காட்டுங்கள்? போராட்டம் நடத்தக்கூடாது என யார் கூறியது? அரசிலயமைப்பை படித்திருக்கிறீர்களா? அப்படி கூடிய கூட்டத்தில் வன்முறை நடந்ததற்கான  ஆதாரம் இருக்கிறதா? ஆசாத் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்கான ஆதாரத்தை  காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பிக்குமா? இவ்வாறு கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் தரப்பில், ‘‘போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட டிரோன் வீடியோ பதிவு காட்சிகள் மட்டுமே உள்ளன. வேறெந்த வீடியோ பதிவும் இல்லை’’ என கூறப்பட்டது. இதற்கு நீதிபதி, ‘‘போராட்ட சம்பவங்களை பதிவு செய்ய சாதனங்களும் இல்லாத நிலையில், பின்தங்கியது டெல்லி போலீஸ் என நீங்கள் நினைக்கிறீர்களா?’’ என கேள்வி கேட்டு விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார். நீதிபதியின் சரமாரி கேள்விகளால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : judge , Citizenship is illegal, issue is a struggle, police, judge, quarrel
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...