×

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டவேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: ‘‘அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்’’ என்று காங். கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் அதிகளவாக சில்லரை பணவீக்க அளவு 7.35 சதவீதமாக கடந்த டிசம்பரில் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ரிசர்வ் வங்கியின் சில்லரை பணவீக்கத்தை விட அதிகமாகும்.  காய்கறி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்தது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை மேற்கொண்டு வருகிறார். அதை கைவிட்டு பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி அடையச் ெசய்வதில் தனது கவனத்தை செலுத்த வேண்டும். இதற்காக அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் அடுத்த 30 அல்லது 60 நாட்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

முன்னெப்போதும் இல்லாதவகையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி இந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பது ஏன்?
இவ்வாறு அவர்கூறினார். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை நாட்டை நிதி நெருக்கடி அவசர நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏழைகளை எட்டி உதைக்கும் மத்திய அரசு: பிரியங்கா

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் கைக்கு எட்டாத வகையில், காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. காய்கறிகள், எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் மாவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் சாதாரண மக்கள் எதை சாப்பிடுவது? பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏழை மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை. பாஜ அரசு ஏழைகளின் சட்டை பையை சுரண்டுவது மட்டுமின்றி அவர்களது வயிற்றிலும் எட்டி உதைக்கிறது. இவ்வாறு பிரியங்கா தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு இளைஞர்களிடம் தாக்கம் ஏற்படுத்தும்: ப.சிதம்பரம் கருத்து

வேலைவாய்ப்பின்மை மற்றும் வருமான சரிவு அதிகரித்தால், இளைஞர்களிடம் கோபத்தை வெடிக்க வைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாடு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிரான போராட்டங்களில் மூழ்கியுள்ளது. இரண்டுமே தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்தை முன்னிறுத்துகின்றன. பொருளாதார சரிவானது நாட்டின் முன்புள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல் மற்றும் வருமானம் குறைவது என்பது இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் கோபத்தை வெடிக்க வைக்கும் அபாயம் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று நுகர்வோர் விலை குறியீடு குறைந்ததையும் டிவிட்டரில் சிதம்பரம் விமர்சித்துள்ளார். “திறமையற்ற நிர்வாகத்தின் சுற்று முடிந்தது. நரேந்திர மோடி அரசு கடந்த 2014ம் ஆண்டு ஜூலையில்  சில்லரை பணவீக்கமான நுகர்வோர் விலை குறியீடு 7.39 சதவீதத்துடன் தொடங்கியது. இது 2019 டிசம்பரில் 7.35 சதவீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் 14.12 சதவீதமாக அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. வெங்காய விலையானது கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதுதான் பாஜ கொடுத்த வாக்குறுதியின் பலனாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Modi ,party meeting ,party ,Congress , All party, Congress, demand to control rising, rising prices
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...