ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி திட்டத்தில் அரிய நோய் சிகிச்சைக்கு 15 லட்சம் மருத்துவ உதவி: மத்திய அரசு பரிந்துரை

புதுடெல்லி: ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ், அரிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒருமுறை சிகிச்சை நிதி உதவியாக 15 லட்சம் வழங்க தேசிய கொள்கை வரைவில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. பரம்பரை மற்றும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி உதவி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது. ஆனால், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசு எவ்வளவு நிதி உதவி வழங்குவது என்பது தொடர்பாக சில குழப்பங்கள் நிலவியதால், திட்டம் நடைமுறைக்கு வருவதில் சிக்கல் நிலவியது.

இதனால், நிபுணர் குழு அமைத்து அரிய நோய் சிகிச்சைகளுக்கான தேசிய கொள்கையை வடிவமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இதன்படி, தேசிய வரைவு கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில், அரிய நோய் சிகிச்சைக்காக ஒருமுறை நிதி உதவியாக 15 லட்சம் வழங்கப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமின்றி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்ட பயனாளிகளில் 40 சதவீதம் பேர் தகுதி பெற்றவர்களாக இருப்பர் என்றும், எய்ம்ஸ், மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி, சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரி போன்ற அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வரைவு கொள்கை மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள், நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் அடுத்த மாதம் 10ம் தேதி வரை தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>