×

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது. 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று முன்தினம் பகல் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். அப்ேபாதுதான் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும்.

மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரஜோதி தென்படும் பகுதிகளில் பக்தர்கள் தற்போதே குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர். மகரசங்கிரம பூஜை: மகரவிளக்கு பூஜை தினத்தில் மகரசங்கிரம பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மகரசங்கிரம பூஜை இன்று அதிகாலை 2.09 மணிக்கு நடந்தது. அதிகாலையில் இந்த பூஜை நடந்ததால் நேற்று இரவு கோயில் நடை சாத்தப்படவில்லை. நேற்று பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்ட கோயில் நடை இன்று அதிகாலை மகரசங்கிரம பூஜை முடிந்து 2.30 மணிக்கு சாத்தப்பட்டது. ஒன்றரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை நடை திறந்திருந்தது மிக அபூர்வமான நிகழ்வாகும்.

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது
சபரிமலை ஐயப்பனின் புகழை பரப்பும் வகையிலும், இந்து மதத்துக்கு சேவை செய்யும் வகையிலும் செயல்படுபவர்களுக்கு கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆண்டுதோறும் ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையன்று சபரிமலை சன்னிதானத்தில் இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டு பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கப்படுகிறது. அதன்படி இன்று காலை 9 மணியளவில் சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த விருதை கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வழங்குகிறார்.  இந்த விருதுடன் 1 லட்சம் பரிசும் வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Mahajyoti Darshan ,Sabarimala ,devotees ,gathering ,darshan , At Sabarimala, today, darshan of Maharajodi, gathering of devotees, wave
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு