பொங்கல் திருநாள் விற்பனை மும்முரம் கோயம்பேடு, புரசைவாக்கம், தி.நகரில் குவிந்த மக்கள்: கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறி விற்பனை களைகட்டியது

சென்னை: பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளதால் கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் தி.நகர், புரசைவாக்கம், கோயம்பேட்டில் நேற்று விற்பனை களைகட்டியது.
பொங்கல் திருநாள் இன்று (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் தினத்தன்று வீடுகளின் முன்பாக மண் பானையில் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். அதுமட்டுமின்றி படையல் போடுவதற்கு பல்வேறு காய்கறிகளை கொண்டு குழம்பு வைப்பர். மேலும் புதிதாக திருமணம் செய்தவர்களின் பெற்றோர் தலை பொங்கலுக்காக மணமக்களுக்கு பல்வேறு பொருட்களை வாங்கி வழங்குவதும் உண்டு. இதையொட்டி, ஏராளமானோர் கரும்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு நேற்று தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்ைட, மயிலாப்பூர், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் வைப்பதற்கான பொருட்கள், காய்கறிகள், கரும்பு, மஞ்சள் கொத்து, வேஷ்டி-சட்டை, பாத்திரங்களை அனைவரும் வாங்கினர். மாலையில் கூட்டம் இரட்டிப்பாக காணப்பட்டது. எங்கும் மக்கள் தலைகளாக காட்சியளித்ததால் முக்கிய சாலைகள் நெரிசல் மிகுந்து காணப்பட்டது. இந்த ஆண்டு சரியான நேரத்தில் மழை பெய்ததால் விளைச்சல் தமிழகம் முழுவதும் நன்றாக உள்ளது. குறிப்பாக கரும்பு, காய்கறிகள் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. இதனால், கரும்பு, காய்கறி விலை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். பொங்கலுக்கு முக்கிய இடத்தை பிடிக்கும் கரும்பு ஒரு கட்டு 450லிருந்து 600 வரை கடந்த ஆண்டு விற்கப்பட்டது. ஒரு கரும்பு 50 வரை விற்கப்பட்டது. இந்தாண்டு மதுரை கரும்பு 400க்கு விற்கப்பட்டது. பண்ருட்டி கரும்பு 300க்கு விற்பனையானது. ஒரு கரும்பு 20 முதல் 22 வரை விற்கப்பட்டது.

கடந்த முறை 120க்கு விற்கப்பட்ட மஞ்சள் கொத்து, தற்போது (2 செடி) 50க்கு விற்கப்படுகிறது. இதேபோல் காய்கறி விலையும் குறைந்துள்ளது. கத்தரிக்காய் கிலோ 25, தக்காளி 20, இஞ்சி 60, வெண்டைக்காய் 35, பாகற்காய் 35, கருணைக்கிழங்கு 35, வள்ளிக்கிழங்கு 30, மொச்சை 35, முள்ளங்கி 15, உருளைக்கிழங்கு 35, கேரட் 50, அவரை 35க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் (பல்லாரி) 40, சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) 100 முதல் 120 வரை விற்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்கள் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி, பொங்கல் பண்டிகை–்கு இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுவே காய்கறி விலை குறைவுக்கு காரணம் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்பாண்ட தொழிலை காப்போம்
பண்டைய காலங்களில் வீடுகளில் மண் பானையில் குடிநீர் இருக்கும். மண் பானையில்தான் சமையல் நடக்கும். காலப்போக்கில் இவை கிராமப்  புறங்களில் கூட காணாமல் போனது. ஆனாலும் இன்றளவும் கூட, மண் பானை சமையலை விரும்புபவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு  காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான்.  வருடம் தோறும் வரும் பொங்கல் பண்டிகை, மக்களுடன் மண் பானை தொடர்பை ஏற்படுத்தி, பாரம்பரியத்தை காக்க செய்கிறது. தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரமாக விளங்கும் மண் பானையில் சமைப்பதால் கிடைக்கும் பயன்களும் அதிகம். மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது.

இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது. மேலும் மண் பானைகள் சமைக்கும் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. ஆனால், உலோக பாத்திரங்களோ, உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது உணவுடன் வினைபுரியும் தன்மை கொண்டது. மேலும் மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. இப்படி மண்பாண்டங்கள் குறித்து பல்வேறு சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் தற்போது பெருகிவரும் விஞ்ஞான வளர்ச்சியாலும், நவநாகரீகம் என்ற பெயரில் வீடுகளில் அலுமினியம், பித்தளை, எவர்சில்வர், வெள்ளி பாத்திரங்கள், பீங்கான் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அலங்கரித்து கொண்டிருக்கின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறது.

இருப்பினும் பாரம்பரிய தொழிலை கைவிட மனமில்லாத அத்தொழிலாளர்கள் மனம் தளராமல் மண்பாண்ட பொருட்களை நம்பிக்கையோடு உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும் மூலப்பொருட்களான தண்ணீர், சவுக்கை, வைக்கோல், ராட்டி, தேங்காய் மட்டை போன்ற பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் இந்த தொழிலை விடாமல் செய்து வரும் எங்களுக்கு வேற எந்த தொழிலும் தெரியாது என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே  களிமண் எடுப்பதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி தர வேண்டும், மேலும் மண்பாண்டம் செய்யும் இயந்திரத்தை தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், சமீபத்தில் பெய்த கனமழைக்கு மண் மற்றும் பானைகள் சரிந்து ₹1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் சேதமடைந்தன. அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் வைத்துள்ளனர்.

‘மண்பாண்டத்தின் மூலம் மரக்கன்று’
மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், தற்போது மண்பாண்ட தொழில் நலிவடைந்து வரும் நிலையில், மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்பாண்ட தொழில் நுட்பத்தின் மூலம் மரக்கன்று நடும் திட்டம் அறிமுகப்படுத்தியது. சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஊராட்சியிலும் அதிக மரங்களை நடும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்பு பாலீத்தின் பையில் வைத்து மரம் நடுவர். இதனால் சுற்றுப்புற சீர்கேடும் விளையும். மண்பானைகள் மூலம் நடும்போது சொட்டுநீர் மூலம் மரக்கன்றுகளுக்கு இறங்கும். இதனால் மரச்செடிகள் நன்கு வளரும். இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும்போது அரசின் சார்பில் எங்களிடம் மண்பானைகள் வாங்குவதற்கு ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்த வேண்டும். அப்படி வாங்கினால் எங்கள் தொழில் பெருக நல்ல வாய்ப்பாக இருக்கும். மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் பூச்செடி தொட்டி வாங்குவதற்கும் அறிவுறுத்தினால் தொழில் மேம்படும் என்றனர்.

Tags : Purasaikavam ,Mummuram Coimbatore ,Mummuram , Pongal Day, Sale, Mummuram
× RELATED புரசைவாக்கம் பகுதியில் தீபாவளி...