×

இரவு முழுவதும் நடத்திய சோதனையில் போகி தீயில் போட வைத்திருந்த 28 ஆயிரம் கிலோ டயர் பறிமுதல்: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சென்னை : போகி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதியில் இரவு முழுவதும் நடத்திய சோதனையில் 28 ஆயிரம் கிலோ டயர் பறிமுதல் செய்யப்பட்டது. போகி பண்டிகையன்று வீட்டில் உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பாய்கள், துணிகள், டயர்,டியூப், ரப்பர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எரிப்பதால் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த புகையினால், கந்தக டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய வாயுக்கள் வெளியாவதால், வயதானவர்கள், சிறுவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுகின்றனர்.

இதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சோதனை நடத்தினர். சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, பொறியியல் துறைகளை சேர்ந்த உதவி பொறியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினரும் நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பல இடங்களில் எரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பழைய டயர், டியூப்களை குழுவினர் பறிமுதல் செய்தனர். ஒருசில இடங்களில் எரிந்து கொண்டிருந்த டயர், டியூப்களை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தினர்.இதன்படி சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 28 ஆயிரத்து 233 கிலோ டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5245 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Tags : Chennai Corporation ,raid ,Chennai , 28,000 kg of tire, confiscated , Chennai police
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...