×

போகி பண்டிகை கொண்டாட்டம் பொருட்களை எரித்ததால் உருவாகிய நச்சு புகையால் சென்னை திணறியது

* விமானங்கள், ரயில்கள் தாமதம்
* பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: போகி பண்டிகை கொண்டாட்டத்தால் நேற்று காலை சென்னை முழுவதும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். விமானங்கள் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான நேற்று தமிழகம் முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கு ஏற்ப பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய துணிகள், பழைய பாய், உள்ளிட்ட  தேவையில்லாத பொருட்களை வீட்டு வாசலில் போட்டு எரித்து போகி கொண்டாடினர். குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே பொதுமக்கள் பொருட்களை எரிக்க தொடங்கினர்.

அதாவது பிளாஸ்டிக், டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கு முன்பு போட்டு எரித்தனர். அவை கொழுந்துவிட்டு எரியும் போது சிறுவர்கள் மேளம் கொட்டி உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரித்ததால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் புகை மூட்டமாக மாறியது. இது விண்ணை முட்டும் அளவுக்கு காட்சியளித்தது. அது மட்டுமல்லாமல் கடுமையான பனி மூட்டமும் காணப்பட்டது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தது. காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். கடுமையான புகை மூட்டத்தால் காலை முதல் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன. பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி பயணம் செய்தனர்.

பாதை தெரியாத அளவுக்கு தண்டவாளங்கள் இருந்ததால் மின்சார ரயில்கள் மிகவும் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும் வேகம் குறைத்து இயக்கப்பட்டது. இதனால், சில ரயில்கள் காலதாமதமாக வந்தன. பணி மூட்டம் மற்றும் புகை காரணமாக 42 விமானங்களை தாமதமாக இயக்கப்பட்டன. 26 க்கு மேற்பட்ட விமானங்கள் சரியான நேரத்திற்கு இயக்க முடியாமல் 2 மணி நேரத்திற்கு மேல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒரு சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பொருட்களை எரிப்பதை கண்காணிக்க சென்னையில் முழுவதும் 30க்கு மேற்பட்ட குழுக்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் 15 இடங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யட்டது. இதில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு காற்றின் மாறு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தடை செய்யப்பட்ட பொருட்களை எரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட டயர்கள் கும்மிடிபூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கும், பிளாஸ்டிக் கழிவுகள் மறு தொழிற்சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

13ம் தேதி காலை 8 மணி முதல் காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி 15 இடங்களிலும் காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு அளவு அனுமதிக்கப்பட்ட 80 மைக்ரோ கிராமுக்கு உள்ளேதான் இருந்தது. காற்றில் கலந்துள்ள நச்சுத் தன்மை மிகுந்த மின் துகள்களின் அளவு 72 மைக்ரோ மீட்டர் முதல் 184 மைக்ரோ மீட்டர் வரை இருந்தது. பெரும்பாலான இடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட 60 மைக்ரோ மீட்டர் அளவை விட அதிகமாக இருந்தன. குறிப்பாக காற்று தர குறியீடு குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 155 ஆகவும், ராயபுரத்தில் 349 ஆகவும் இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு காற்றின் தரவு அளவு 126 மைக்ரோ மீட்டர் முதல் 249 வரையும், 2018ம் ஆண்டு காற்றின் தர அளவு 135 மைக்ரோ மீட்டர் முதல் 386 வரை இருந்தது. இதை பார்க்கும் போது இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,festival celebrations ,burning ,Poki , Bogie festival, poisonous smoke, Madras, staggered
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...