மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

மதுரை: மதுரை பஸ் நிலையங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை லேண்ட்லைன் எண்ணில் இருந்து ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘‘மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ் நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையம் பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திருக்கிறோம். சில நிமிடங்களில் வெடித்து விடும்’’ எனக்கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இந்த போன் அழைப்பு மதுரை நகர் பகுதியில் இருந்து சென்றதாக தெரிகிறது.

தகவலின்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் உதவியுடன் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர். இதேபோல், ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதியிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் கரிமேடு போலீசார் இணைந்து தொடர் சோதனையை நடத்தினர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத்தெரிந்தது. மேலும் நகரின் அண்ணா பஸ் ஸ்டாண்ட், பழங்காநத்தம் பகுதிகள், மார்க்கெட்டுகள், மக்கள் கூடும் முக்கிய இடங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த சோதனை அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Madurai ,bus stations , Madurai, bus station, bomb, intimidation
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை