×

எம்ஜிஆர் தாத்தா ஜெயலலிதா பாட்டி: மாணவர்களிடம் அமைச்சர் சீனிவாசன் ‘அட்வைஸ்’

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் எம்ஜிஆர் தாத்தா, ஜெயலலிதா பாட்டி என அமைச்சர் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் 306 ஊராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று துவக்கி வைத்து வீரர், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வழங்கினார். பின்னர் அவர் மாணவர்களைப் பார்த்து, ‘முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை உங்களுக்கு தெரியுமா?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ‘தெரியும், அவரை சினிமாவில் பார்த்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

‘அவர் உங்களுக்கு தாத்தா’ என்று கூறிய அமைச்சர், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தெரியுமா?’ என கேள்வி எழுப்பினார். தெரியும் என்றும் மாணவர்கள் பதில் அளித்தனர். ‘அவர் உங்களுக்கு பாட்டி’ என கூறினார். மேலும் அமைச்சர் பேசுகையில், ‘எம்ஜிஆர் ஒரு திரைப்படத்தில் குழந்தைகளை பார்த்து ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...’ என்று பாடியுள்ளார் என்று கூறி அந்த பாடலை மேடையில் தப்பும் தவறுமாக மாணவர்கள் முன்பு பாடி சமாளித்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் அதிமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே சர்ச்சை மற்றும் சிரிப்பு பேச்சுக்கு பெயர்போன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது பொங்கல் கலகலப்பாக எம்ஜிஆரை தாத்தா என்றும், ஜெயலலிதாவை பாட்டி என்றும் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Grandfather Jayalalithaa ,Minister ,Srinivasan , MGR Grandfather, Jayalalithaa Grandmother, Student, Minister Srinivasan
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...