×

அறிக்கை விவகாரம் அழகிரிக்கு சோனியா ‘டோஸ்’: காங்கிரசார் அதிர்ச்சி

சென்னை: சோனியா காந்தியை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, காங்கிரசும், திமுகவும் இணைந்த கரங்கள், எப்போதும் பிரிய வாய்ப்பில்லை என்று கூறினார். தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிக்கை டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் விவாதிக்காமல் தன்னிச்சையாக வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் மேலிடம் கே.எஸ்.அழகிரி மீது கடும் அதிருப்தி அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவரை டெல்லிக்கு புறப்பட்டு வருமாறு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று, நேற்று முன்தினம் கே.எஸ்.அழகிரி டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவர் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசினார். இதையடுத்து அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க நேற்று நேரம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 11 மணியளவில் சோனியா காந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். அப்போது உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் அளிக்கும்படி சோனியா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்பு வெளியில் வந்த கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் மாநில நிர்வாகிகளை புதிதாக நியமிப்பது சம்பந்தமாக கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் கலந்து பேசினோம். அதுதான் மிக முக்கியமான கலந்துரையாடலாக இருந்தது. அதன் பிறகு கூட்டணி பற்றிய பேச்சும் வந்தது. கூட்டணியை பொறுத்தவரை என்னுடைய கருத்தை சொன்னேன். திமுகவும், காங்கிரசும் இணைந்த கரங்கள். தமிழக காங்கிரசும் திமுகவும், நானும், மு.க.ஸ்டாலினும், அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் சிறந்தவர்கள். நெருக்கமானவர்கள். இணைந்த கரங்கள் எப்போதும் பிரிவதற்கான வாய்ப்பும் கிடையாது. எனவே கூட்டணி நல்ல முறையில் இருக்கிறது என்பதை அவரிடம் நான் சொல்லியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் எந்தவித சலசலப்பும் இல்லை என்பதே எனது கருத்து.

நிச்சயமாக ஒரு வெற்றிக்கு கூட்டணி கட்சிகளும் காரணம்தான். இல்லை என்று சொல்ல முடியாது. திமுகவும், காங்கிரசும், கூட்டணியில் இருக்கும் மற்றவர்களும் சேரவில்லை என்றால் தமிழ்நாட்டில் அத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது. கூட்டணி வெற்றிக்கு எல்லாரும் காரணம். நிச்சயமாக எங்கள் கூட்டணி என்பது நல்ல பாதையை நோக்கி செல்லுமே தவிர தவறான பாதையை நோக்கி செல்லாது. நான் ஒரு தலைவர். ஒரு அறிக்கை விடக் கூடவா எனக்கு அனுமதி இல்லை. நிச்சயமாக எதிராக நான் அறிக்கை விடவில்லை. எங்களை பொறுத்தவரை எங்கள் உறுதியான கருத்து நாங்களும், திமுகவும் இணைந்த கரங்கள். எங்கள் கரங்கள் இணைப்புக்கு காரணம், எங்கள் கூட்டணி தொடரும். வருங்காலத்திலும் நிச்சயமாக கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Congressional ,Sonia ,Congressional Shock ,Alagiri , Report affair, blonde, sonia, shock,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...