×

வேதாரண்யத்தில் அம்மன் சிலையை விற்க ரூ.1.20 கோடிக்கு பேரம் பேசிய பூசாரி உள்பட 2 பேர் கைது: கார் டிரைவரும் அதிரடி கைது: 9 சிலைகள் பறிமுதல்

சென்னை: வேதாரண்யத்தில் பழமையான அம்மன் சிலையை ரூ.1.20 கோடிக்கு விற்பனை செய்ய போரம் பேசிய கோயில் பூசாமி மற்றும் அவரது கார் டிரைவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள 9 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலைய பகுதியில் சிலர் அம்மன் சிலையை காரில் கொண்டு வந்து விற்பனை செய்ய முயல்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி டிஎஸ்பி தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சாதாரண உடையில் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, இருவர் அம்மன் சிலை உட்பட 2 சிலைகளை ரூ.1.20 கோடிக்கு விற்பனை செய்ய வெளிநாட்டு தரகர்களின் முகவர்களிடம் செல்போனில் பேரம் பேசியது தெரியவந்தது. இதை கவனித்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் வந்த காரை சோதனை செய்த போது பழமையான இரண்டு சிலைகள் இருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சென்னை கிண்டியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த பூசாரி பைரவ சுந்தரம் மற்றும் அவரது கார் டிரைவர் செல்வன் ஆகியோர் அம்மன் சிலையை ரூ.1.20 கோடிக்கு விற்பது தொடர்பாக பேசிய பொழுது, ரகசியமாக தகவலறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்து ஒன்றரை அடி உயர உலோக அம்மன் சிலை, வள்ளி தெய்வானை சிலைகள், வராக அவதாரம் கொண்ட பெருமாள் சிலை  உள்ளிட்ட 9 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மீட்கப்பட்ட ஒரு சில சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள சிலைகள் குறித்த விவரத்தையும் அவற்றின் புகைப்படத்தையும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு நாங்கள் அனுப்பி உள்ளோம். காணாமல் போனதாக ஏதாவது புகார்கள் இருந்தால் உரிய கோயில் நிர்வாகத்திடம் கைப்பற்றப்பட்ட சிலைகள் ஒப்படைக்கப்படும். அவர்களுடன் பேரம் பேசிய நபர்கள் யார் என்பது குறித்தும், ஏதேனும் சிலைகள் விற்பனை செய்துள்ளார்களா என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு சிலைகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பூசாரி பைரவ சுந்தரம் மற்றும் டிரைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : persons ,priest Police ,priest ,Vedaranyam ,Amman , Vedaranyam, Amman statue, priest, 2 persons, arrested, 9 statues, confiscated
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...