×

குமரி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 தீவிரவாதிகள் கர்நாடகாவில் கைது

* வட மாநிலத்துக்கு தப்பமுயன்றபோது சுற்றிவளைப்பு
* சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணை

பெங்களூரு: குமரி சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட 2 தீவிரவாதிகளை, கர்நாடக மாநிலம் உடுப்பியில் தமிழக, கர்நாடக போலீசார் நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் (57) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே இந்து இயக்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை கொல்ல முயன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்கள்.

கடந்த 7ம்தேதி பெங்களூருவில் பதுங்கியிருந்த முகமது ஹனிப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகியோரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அப்துல்சமீம், தவுபிக் ஆகியோரின் கூட்டாளிகள் ஆவர். இவர்களின் கைதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் 8ம்தேதி இரவு களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. தலைமறைவான 2 பேரையும் பிடிக்க குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொலை நடந்து இரு நாட்களுக்கு பின் டெல்லியில், தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக காஜாமைதீன் (52), அப்துல் சமது (28), சையது அலி நவாஸ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சையது அலி நவாஸ், நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர். இவரும், அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகியோரின் கூட்டாளிதான். தொடர்ந்து இருவரையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. நேற்று அதிகாலை, கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையம் அருகே அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக இருவரையும் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பல மணி நேர விசாரணைக்கு பின், இவர்கள் இருவரும் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் நேற்று முன்தினம் இஜாஸ் பாட்சா, இம்ரான்கான், சலீம்கான் உள்பட 5 பேரை போலீசார் பிடித்தனர். இதில் இஜாஸ்தான் மகாராஷ்டிராவில் இருந்து துப்பாக்கியை தவுபிக் மற்றும் அப்துல் சமீமுக்கு வாங்கி கொடுத்தது தெரிய வந்தது. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில்தான் உடுப்பியில் 2 தீவிரவாதிகளையும் போலீசார் சுற்றிவளைத்துள்ளனர். கோழிக்கோடு, மங்களூர் வழியாக உடுப்பி சென்ற இவர்கள் ரயில் மூலம் மேற்கு வங்கம் சென்று, அங்கிருந்து நேபாளத்துக்கு தப்ப திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரிடமும் கொலைக்கான பின்னணி என்ன? வேறு சதிதிட்டத்துக்கு திட்டமிட்டார்களா? என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவர்களுடன் யார், யார் தொடர்பில் உள்ளனர் என்பது பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

கம்ப்யூட்டர் இன்ஜினியர் தலைமறைவு: கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் நடந்து செல்லும் காட்சிகள், பதற்றத்துடன் பள்ளிவாசலுக்குள் ஓடும் காட்சிகள் இருந்தன. இதேபோல் களியக்காவிளை -திருவனந்தபுரம் இடையே உள்ள மற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் கொலை நடந்த 8ம் தேதி, நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில் அருகே சாலையில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.  

முதலில் அவர்களிடம் கையில் பை இல்லை. சிறிது நேரம் கழித்து ஒரு குறுக்கு சந்துக்குள் சென்று வந்ததும், அப்துல்சமீம் கையில் பை இருந்தது. எனவே அந்தபையில்தான், துப்பாக்கியை வைத்திருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்கள் ஏறி சென்ற ஆட்டோவை கண்டுபிடித்து, ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தனர். இதில் இவர்கள் நெய்யாற்றின்கரையில் வாடகை வீட்டில் இருந்தது தெரியவந்தது. இந்த வீட்டை கம்ப்யூட்டர் இன்ஜினியர் சையதுஅலி என்பவர்தான் வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அவரும் தலைமறைவாக உள்ளார். அவரையும் போலீசார் தேடுகின்றனர்.

* 2 பேரும் சிக்கியது எப்படி?
தமிழக  போலீசார் கேட்டுக்கொண்டதை அடுத்து, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா, கர்நாடகத்தையொட்டிய கடலோர மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 தீவிரவாதிகளும் தப்பி வருவதாக தகவல் கிடைத்தது. கொலையாளிகளை மடக்கி பிடிக்க உடுப்பி ரயில் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசார் காத்திருந்தனர். ரயிலில் பயணம் செய்த 2 தீவிரவாதிகளை புகைப்பட ஆதாரங்களை வைத்து உறுதி செய்து சுற்றி வளைத்தனர். இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இருப்பினும் துப்பாக்கி முனையில் அவர்களை மடக்கி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவ்பீக் என்பது உறுதியானது. இது குறித்து தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பெங்களூருவில் முகாமிட்டிருந்த தமிழக தனிப்படை போலீசாரிடம் அப்துல் சமீம், தவ்பீக் ஒப்படைக்கப்பட்டனர். பெங்களூருவில் கொலையாளிகளிடம் முதற்கட்ட விசாரணை நடத்திய கியூ பிரிவு போலீசார் அடுத்த கட்ட விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Tags : militants ,Kumari ,district ,Sub Inspector ,terrorists , Kumari District, Sub Inspector, 2 terrorists, Karnataka, arrested
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...