திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் பூண்டி செங்கரையூர் பாலம் உள்ளது. பாலத்தின் மேற்கு பகுதியில் நேற்று மதியம் திருச்சி பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் சென்றபோது நடு ஆற்றில் தண்ணீரில் ஒரு சிலை கிடப்பதை பார்த்துள்ளார்.இதையடுத்து அவர் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மதி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது தண்ணீரில் சிலை கிடந்தது.இதையடுத்து விஏஓ வீரமணி மற்றும் கிராம உதவியாளர் ராபர்ட்டுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் முன்னிலையில் சிலை வெளியே எடுக்கப்பட்டது.
இதில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை 2 அடி உயரம், முக்கால் அடி அகலம் உள்ளது.சில நாட்களுக்கு முன் மர்மநபர்கள், கோயிலில் இருந்து சிலையை கடத்தி கொண்டு வந்து மறைத்து வைக்க தண்ணீரில் போட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து பூதலூர் தாசில்தார் சிவகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்த பூதலூர் தாலுகா அலுவலகத்துக்கு சிலை கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இதுகுறித்து தாசில்தார் சிவகுமார் கூறுகையில், அம்மன் சிலை கண்டெடுத்தது குறித்து அறநிலையத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்படும். பின்னர் அவர்களிடம் சிலையை ஒப்படைப்போம் என்றார்