×

தமிழகம் முழுவதும் காசோலை பணபரிவர்த்தனை ‘கட்’ ஊராட்சிகளில் பிஎப்எம்எஸ் நடைமுறை: விரைவில் செயல்படுத்த அரசு முடிவு

வேலூர்: தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் இனி காசோலை முறை ரத்து செய்யப்பட்டு, பிஎப்எம்எஸ் நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும் 385 ஊராட்சி ஒன்றியங்களில் 12,620 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளுக்கான அடிப்படை தேவைகள் ஊராட்சி பொதுநிதி, மத்திய, மாநில அரசுகள் வழங்கும்  மாநில நிதிக்குழு மானிய நிதி,  நிபந்தனைக்குட்பட்ட மானிய கணக்கு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறைவேற்றப்படுகின்றன. இதில் ஊராட்சி பொது நிதியில் பொதுமக்கள் நேரிடையாக  செலுத்தும் சொத்துவரி, வீட்டு வரி, குழாய் வரி, கடைகள், நிறுவனங்களின் உரிமக்கட்டணங்கள், ஆசிரியர், அரசு ஊழியர்கள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் செலுத்தும் தொழில் வரி ஆகியவற்றின் கீழ்  கிடைக்கும் வருவாய் சேர்க்கப்படுகிறது.  மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மாநில நிதிக்குழு மானிய நிதி ஒவ்வொரு ஊராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப ₹20 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்படுகிறது.

இதில் அடிப்படை  கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதுதவிர மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடு திட்டம், மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகளுக்கு செலவழிக்கப்படுகிறது.இந்நிலையில் ஊராட்சிகளில் முற்றிலுமாக முறைகேடுகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. விரைவில் (பிஎப்எம்எஸ்) பப்ளிக் பைனான்சியல் மேனேஜ்மன்ட் சிஸ்டம் என்ற நடைமுறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் வங்கி கணக்கு மூலம் பணபரிவர்த்தனை நடந்து வருகிறது. குறிப்பாக ஊராட்சிகளில் நடக்கும் வேலைகளுக்கு காசோலை மூலமாக பணம் வழங்கப்படுகிறது. இதனால் பல மாதங்கள் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தடுக்கவும், விரைவில் பணம் கிடைக்கும் வகையில் அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.

அதாவது, கிராம ஊராட்சிகளில் விரைவில் பிஎப்எம்எஸ் என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இனி பண பரிவர்த்தனை என்பது, ஊராட்சி செயலர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரின்ட் பேமன்ட் அட்வைஸ் தயாரித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அதை அங்கீகரித்து ெஜனரேட் செய்வார். ஜெனரேட் செய்யப்பட்ட பிபிஏ கடிதத்தில் தலைவர், துணைத்தலைவர் கையொப்பமிட்டு வங்கிக்கு அனுப்புவர். பிறகு சம்பந்தப்பட்டவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும். டவுன்லோடு செய்யப்பட்ட பிபிஏ கடிதம் 10 நாளைக்கு செல்லபடியாகும். அதன்பிறகு அது தகுதியற்றதாகும். இனிமேல் ஊராட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்தாரர் ஜிஎஸ்டி வரி கட்டி பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அனைத்தும் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாகவே நடக்கும். இதன் மூலம் நேரடியாக பணத்தை எடுக்க முடியாது. மேலும் காசோலைகளும் தடை செய்யப்படும். இந்த நடைமுறை விரைவில் வர உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : PFMS ,Government ,Tamil Nadu , PFMS practice,check transactions,Tamil Nadu: Government's , implement soon
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...