×

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் மக்கள் கொதித்து எழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், “தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும்” உள்ள வேறுபாடு தெரியாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வருவதின் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்குத்தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் “தேசிய குடிமக்கள் பதிவேடு கிடையாது. நாங்கள் கணக்கெடுக்கவில்லை” என்று கூறி, தமிழக மக்களை திசை திருப்பி வருவது கவலையளிக்கிறது.

சிறுபான்மையின மக்கள் மட்டுமின்றி - ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியால் பெரும் பாதிப்பு என்பதை அறிந்து தான் திமுக சார்பில் நானே இந்த பிரச்சினையை எழுப்பினேன். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தோ அல்லது தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்றோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்று கூறிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், எதிர்க்கட்சிகளின் அச்சம் அடிப்படையற்றது என்று அபத்தமாக வாதாடினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்து நாடு முழுவதும் போராட்டமும், கலவரமும் ஏற்பட காரணமான அ.தி.மு.க. அரசு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கொடுத்த தனிநபர் தீர்மானத்தை விவாதத்திற்கே ஏற்க மறுத்தது.

கேரள மாநில அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தம் -2019-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், அதைப் பின்பற்றி ஒரு தீர்மானத்தை அரசின் சார்பில் நிறைவேற்ற தைரியம் இன்றி அஞ்சி நடுங்கி மத்திய பா.ஜ.க. அரசிற்கு கைகட்டி நின்றது அ.தி.மு.க. அரசு. இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தற்போது புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையானவை என்ற விவரங்களும் பொதுவெளிக்கு வந்து விட்டன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன.

பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி ஆட்சி செய்யும் பீகார் மாநில முதல்-மந்திரி . நிதிஷ்குமாரே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்ற ஒன்று. அதை பீகார் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று துணிச்சலாக அறிவித்துள்ளார். தன் சொந்தக் கட்சி என்று கூட பாராமல் அசாம் மாநில பா.ஜ.க. முதல்-மந்திரியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுவதற்கு ஆதரவாக இருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழி விடுவதும் கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு நெருக்கடியும் துயரமுமளிக்கும் கணக்கெடுப்பு குறித்து, தொடர்ந்து அ.தி.மு.க. அரசு அமைதி காத்தால், விரைவில் மாபெரும் போராட்டத்தை- நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திமுக நடத்திடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

Tags : MK Stalin The AIADMK ,National Census ,National Citizen Registry ,government ,MK Stalin , AIADMK ,not discriminate, National Census , National Citizen Registry,government , maintain silence, MK Stalin
× RELATED தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு...