×

வறுத்தெடுக்கும் கோடை வெயில் திருக்குறுங்குடி குளம் வறண்டது-விவசாயிகள் கவலை

களக்காடு : மழையின்றியும், வறுத்தெடுக்கும் கோடை வெயிலாலும்  திருக்குறுங்குடி பெரிய குளம் தண்ணீரின்றி முற்றிலும் வறண்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மற்றும் சுற்று வட்டாரத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் ஆரம்பிக்கும் முன்னர் தற்போதே கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்பட்ட அனலின் தாக்கம் இரவிலும் நீடிப்பதால் பொதுமக்கள் புழுக்கத்தால் தவிக்கின்றனர். பகலில் அனல் பறக்கும் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் களக்காடு பகுதியில் உள்ள ஆறு, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதேபோல் களக்காடு பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் திருக்குறுங்குடி பெரியகுளமும் கோடை வெயிலால் தண்ணீரின்றி வறண்டுள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசனம் பெறும். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையால் முழுமையாக தண்ணீர் நிரம்பி கடல் போல் குளம் காட்சி அளித்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் வரை கொட்டித் தீர்த்த மழையால் குளத்தில் தண்ணீர் நிரம்பி ததும்பிய வண்ணம் இருந்தது. ஆனால், அதன் பிறகு திருக்குறுங்குடி பகுதியில் மழை பெய்யவில்லை. மேலும் தற்போதே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெரியகுளம் நீரின்றி வறண்டுள்ளது. ஆங்காங்கே பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது இப்பகுதியில் நெல் அறுவடை பணிகள் முழுவதும் முடிவடைந்த போதிலும் வாழைகளுக்கு தண்ணீர் பாய்க்க வேண்டியதுள்ளது. இவ்வேளையில் குளம் வறண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோடை மழை கொட்டினால் மட்டுமே வறண்டு கிடக்கும் குளத்திற்கு. தண்ணீர் வரத்து ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்….

The post வறுத்தெடுக்கும் கோடை வெயில் திருக்குறுங்குடி குளம் வறண்டது-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Tirukurungudi ,Kalakkadu ,Thirukkurugundi ,
× RELATED மனைவியை சரமாரியாக வெட்டியவருக்கு வலை