×

பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஊட்டி: பொங்கல் விடுமுறையையொட்டி பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக இன்று முதல் ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 25 சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்கப்படுகிறது. ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகை தொடர் விடுமுறை நாட்களின்போது சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகமாக காணப்படும். அதேபோல், பள்ளி விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தற்போது சொந்த கார்கள், வாடகை வாகனங்கள் மற்றும் தனியார் பஸ்களின் மூலம் வந்தாலும், நடுத்தர மக்கள் அரசு பஸ்களின் மூலமாகவே வந்துச் செல்கின்றனர். இது போன்ற சமயங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக எப்போதும் இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்களை ஊட்டியில் இருந்து போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. 


இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோரின் வசதிக்காக நேற்று பிற்பகல் முதல் ஊட்டி அரசு போக்குவரத்து கழத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ேகாைவ, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை மற்றும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள்  ஊட்டியில் இருந்து இயக்கப்படுகிறது. இது தவிர சுற்றுலா பயணிகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்களும் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் 19ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இதில் தினமும் 20 முதல் 25 பஸ்கள் வரை பயணிகள் கூட்டத்தை பொறுத்து 6 நாட்களுக்கு 120 சிறப்பு பஸ்கள் வரை இயக்க முடிவு செய்துள்ளது. மேலும், பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாகவும் இயக்கப்படவுள்ளது. 


இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் பொங்கல் விடுமுறை போன்ற நாட்களில் ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், கோவை மற்றும் வெளியூர்களில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பஸ்கள் இருக்கும். பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி அரசு பஸ்களில் பயணிக்கலாம், என்றனர்.



Tags : Ooty ,holidays ,Pongal Vacation 25 Special Bus Movement , From Ooty on Pongal Vacation 25 Special Buses Movement
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்