பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,186 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி ஆணை

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மற்றும் சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள்  அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் (நிலை-1 மற்றும் நிலை-2),  தலைமைக் காவலர் (ஆண்கள்/பெண்கள்), சிறப்பு சார்பு ஆய்வாளர் (ஆண்கள்/பெண்கள்) ம மற்றும் ஆயுதப்படையில் ஹவில்தார் நிலைகளில் (ஆண்கள்/பெண்கள்) பணிபுரியும்  3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்  வழங்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்கள்) 60 பணியாளர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.  மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படியாக தலா  ரூ. 400/-  2020 பிப்ரவரி  1 ம் தேதி முதல் வழங்கப்படும்.   இவர்கள் அனைவருக்கும் காவல் துறை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இயக்குநர், மற்றும் சிறைத்துறை தலைவர் அவர்களால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில்  முதலமைச்சர் அவர்களின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.  

மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள்,  நாய் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2  அதிகாரிகள் என ஆக மொத்தம்  6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது.  இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூபாய் 4 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூபாய் 6 ஆயிரமும்,  காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படும்.  இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முதலமைச்சர் அவர்களால்  பதக்கம் மற்றும் பதக்கச்சுருள் வழங்கப்படும். இவ்வாறு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palanisamy ,Pongal , Pongal, Festival, Police, Uniform, Chief Minister, Edappadi Palanisamy, Announcement
× RELATED முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு