×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மனு நாளை விசாரணை

டெல்லி : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே. கண்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். தென்கால் பாசன் விவசாயிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்துவதாக மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக விவசாயிகள் சங்கம் நடத்தி வந்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைத்திருப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

*உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15ஆம் தேதி தைப் பொங்கல் திருநாளில் நடைபெறுகிறது. இதில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

*இதுதொடர்பாக பல்வேறு கட்டப்பேச்சுவார்த்தைகள் நடந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே இம்முறை ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்தது.

*இந்த சூழலில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம், ராமசாமி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

*அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் விழாக் கமிட்டிக்கு தலைமை வகிப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழு தலைவராக இருந்து வருகிறார்.இவர் கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பது இல்லை. யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனித்து முடிவுகளை எடுக்கிறார். குடும்ப விழா போல் நடந்து கொள்கிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் பங்கேற்க பட்டியலின சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஜல்லிக்கட்டை ஒற்றுமையுடன் நடத்தும் நிலை குறையும். இதில் ஈடுபடும் ஆர்வமும், பங்கெடுப்பும் குறைந்துவிடும். எனவே கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

*இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த வேண்டும்.மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.இதேபோன்று அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளை மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

*இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே. கண்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை உடனடியாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஏ.கே. கண்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர் சிவபால முருகன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிட்டார்.

*அந்த மனுவில்,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது. இது தங்களது பாரம்பரிய உரிமை ஆகும். ஆனால் ராமசாமி என்பவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளது. இது எங்களது பாரம்பரிய உரிமைக்கு எதிரானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.


Tags : Supreme Court ,competition ,judge ,committee ,Avaniyapuram Jallikattu Competition , Avaniapuram, Jallikattu, Appeal, Tenkal Irrigation Farmers, Supreme Court
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...