×

திடீரென நிறுத்தி வைக்கப்பட்ட முடிவு: புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் திமுக வெற்றி: கலெக்டர் அறிவிப்பு

திருவண்ணாமலை: நிறுத்தி வைக்கப்பட்ட புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக கலெக்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. இதில் மொத்தமுள்ள 15 கவுன்சிலர்களும்  வாக்களித்தனர். அதில், திமுகவைச் சேர்ந்த சி.சுந்தரபாண்டியன், 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ், 5 வாக்குகளை பெற்றார். இதை தேர்தல் நடத்திய அதிகாரி சபாநாயகம் அறிவித்தார். கூட்ட நடவடிக்கை பதிவேட்டிலும் குறிப்பிடப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கையெழுத்திட்டனர். இந்நிலையில், மேலிட அழுத்தம் காரணமாக, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்காமல் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் ஆதரவாக வாக்களித்த சுயேட்சை கவுன்சிலர்கள் உள்பட 10 பேரும், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் நேரில் முறையிட்டனர். தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்த பிறகே இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இது ெதாடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மேலும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்ட முடிவை கலெக்டர் கந்தசாமி நேற்று அறிவித்தார். அதன்படி, திமுகவைச் சேர்ந்த சி.சுந்தரபாண்டியன், 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக கூறி, வெற்றி சான்றும் அவரிடம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, கலெக்டர் கந்தசாமி கூறுகையில், கவுன்சிலர்கள் வாக்களித்ததில் தவறு நடந்ததாக கிடைத்த புகாரின் பேரில், முடிவு வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.  சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக 10 கவுன்சிலர்களும் நேரில் வந்து உறுதிப்படுத்தினர். எனவே, மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, முடிவு அறிவிக்கப்பட்டது என்றார்.

Tags : New Delhi ,DMK ,union committee election ,Collector ,union election , New Delhi, Union Committee Election, DMK, Collector
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...