×

முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மும்பையில் இன்று பகல்/இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்து விளையாடிய ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளதால், இம்முறையும் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸி. அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், அலெக்ஸ் கேரி என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளதால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் வேகக் கூட்டணியும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம், கோஹ்லி தலைமையில் வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய அணி, சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்க வரிந்துகட்டுகிறது. ரோகித், தவான், ராகுல், கோஹ்லி, பன்ட், ஜடேஜா, பாண்டே என இந்திய அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.பூம்ரா, ஷமி, தாகூர், சைனி வேகக் கூட்டணியுடன் குல்தீப், சாஹல், ஜடேஜா என்று ஸ்பின்னர்களும் விக்கெட் வேட்டை நடத்த காத்திருப்பதால் ஆஸி. பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அத்தனை எளிதாக இருக்காது என்று நம்பலாம். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது என்றால் மிகையல்ல. வாங்கடே மைதான ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பவுண்டரியும் சிக்சருமாகப் பறப்பது உறுதி.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித், தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஜடேஜா, யஜ்வேந்திர சாஹல், குல்தீப், நவ்தீப், ஜஸ்பிரித் பூம்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி. ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட்ரிக் கம்மின்ஸ், ஆஷ்டன் ஏகார், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசல்வுட், மார்னஸ் லாபுஷேன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டார்க், ஆஷ்டப் டர்னர், வார்னர், ஆடம் ஸம்பா.

நேருக்கு நேர்...
* இரு அணிகளும் மோதியுள்ள ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 77 வெற்றியும், இந்திய அணி 50 வெற்றியும் பெற்றுள்ளன.
* இந்திய மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா 29-27 என முன்னிலை வகிக்கிறது.
* 2013ல் இருந்து மோதிய போட்டிகளில் இரு அணிகளும் தலா 13 வெற்றிகளுடன்
சமநிலையில் உள்ளன.
* 2013ல் இருந்து இந்திய மண்ணில் மோதிய போட்டிகளில் இந்தியா 9-6 என முன்னிலை வகிக்கிறது.
* இதே காலகட்டத்தில் இரு அணிகளும் மோதிய 28 ஒருநாள் போட்டிகளில், 25ல் 300+ ஸ்கோர் அடிக்கப்பட்டுள்ள நிலையில், சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 303 ஆக உள்ளது.
* இரு அணிகளிலும் சேர்த்து 35 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. எனவே இம்முறையும் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

Tags : India ,Australia 1st ODI India , ODI match, India, Australia
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...