×

குரூப்-4 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக புகார் எதிரொலி,..ராமேஸ்வரம், கீழக்கரையில் தேர்ச்சி அடைந்தவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

* புது வினாத்தாள் மூலம் மீண்டும் தேர்வு
* சொந்த மாவட்டத்தில் தேர்வை தவிர்த்தது ஏன் என்று ேகள்வி
* சென்னையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு

சென்னை: குரூப்-4 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து ராமேஸ்வரம், கீழக்கரையில் தேர்வான 20 பேர்களிடம் நேற்று சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில்(2018-2019,  2019-2020ம் ஆண்டுக்கானது) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), இளநிலை உதவியாளர், வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர்  உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருந்த 9398 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நடத்தியது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். தொடர்ந்து நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். மேலும் அங்கு தேர்வு எழுதிய 40 பேர் முதல் நூறு இடங்களுக்குள் வந்தனர்.

இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதாவது, அவர்கள் அனைவரும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சொந்த மாவட்டத்திலேயே அதிக அளவில் தேர்வு கூடங்கள் இருக்கும் போது இங்கு வந்து ஏன் தேர்வு எழுதினர். இதனால், குரூப் 4 தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக குரூப் 4 தேர்வு தொடர்பாக பாரபட்சமுமின்றி விசாரணை நடத்தப்படும். தவறு கண்டுப்பிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவித்தார். உடனடியாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் தேர்வு நடந்த இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 57 பேருக்கு டிஎன்பிஎஸ்சி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று 20 பேர் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஸ்சி அலுவலகத்தில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சொந்த மாவட்டத்தில் தேர்வு கூடங்கள் இருக்கும் போது ராமேஸ்வரம், கீழக்கரையில் ஏன் தேர்வு எழுதினீர்கள்?. எப்படி தேர்வில் தேர்ச்சி பெற்றீர்கள், தேர்வு எழுதுவதற்கு யாராவது உதவினார்களா?.

எத்தனை முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளீர்கள், குடும்ப பின்புலம் என்ன உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். அது மட்டுமல்லாமல் அந்த 20 பேருக்கும் புதிய வினாத்தாள் கொடுத்து தேர்வும் நடத்தப்பட்டது. உடனடியாக அந்த தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டது. அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்களிடம் இவர்கள் தேர்ச்சி பெற தகுதியானவர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கிறார்களா? என்றும் பார்த்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2 மணி வரை நடந்தது. அதன் பிறகு விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்களிடம் காகிதத்தில் எழுதி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, விசாரணைக்கு எந்த நேரத்தில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அழைத்தாலும் வர வேண்டும். தேர்வில் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் எழுதி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

இன்று மீதியுள்ளவர்களை விசாரணைக்கான டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அழைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற 57 பேரிடம் விசாரணைக்கு பிறகே தேர்வில் ஏதேனும் முறைகேடு நடந்ததா? என்பது தெரியவரும். முறைகேடு நடந்தது கண்டுபிக்கப்பட்டால் தேர்வு எழுதியவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும். அதே நேரத்தில் அவர்கள் இனிமேல் டிஎன்பிஎஸ்சி நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாத அளவுக்கு தடை விதிக்கப்படும். அப்படி முறைகேடு நடந்தது தெரியவந்து, தேர்வு எழுதிய மற்ற மாணவர்கள் யாராவது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் தேர்வு ரத்து செய்யப்படவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Tags : Group-4 ,Rameswaram Group-4 ,Rameshwaram , Group-4 selection, abuse, Rameswaram, downstairs
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டல்...