×

களியக்காவிளை சோதனைச்சாவடியில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு 1 கோடி உதவித்தொகை: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: களியக்காவிளை சோதனைச்சாவடியில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சனின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரண உதவியை முதல்வர் எடப்பாடி நேற்று வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, இரண்டு பேர் கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பினர். இதில் உயிரிழந்த வில்சன் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அப்போது, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என்றும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தை கருத்தில் கொண்டும் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு 1 கோடி வழங்கப்படும் என்றும் கடந்த 10ம் தேதி அறிவித்தார்.

அதன்படி, உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் நேற்று சென்னை, தலைமை செயலகம் வந்தனர். வில்சனின் மனைவியிடம் தமிழக அரசின் சார்பில் 1 கோடிக்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் வடநேரே மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், எஸ்ஐ வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 6 நாட்களுக்கு மேலாக என் கணவரை இழந்து வாடுகிறோம். தற்போது முதல்வரை நேரில் சந்தித்தோம். எங்கள் குடும்பத்திற்கு உதவித்தொகை  அளித்துள்ளனர். அதேபோல் என் மகளின் கல்விக்கும் உதவுவதாக கூறியுள்ளனர். அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இதுபோன்ற கொடுமை வரக்கூடாது. குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை  எடுப்போம் என்று கூறியுள்ளனர்.   அரசு வேலை எனது மூத்த மகளுக்கு அளிக்க உள்ளனர். 2வது பெண் குழந்தை ஊனமுற்ற பெண். எந்த உதவி  வேண்டுமானாலும் செய்து தருவதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

என்கவுன்டர் செய்யுங்கள் பிரின்ஸ் எம்எல்ஏ ஆவேசம்
களியக்காவிளை  காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை சம்பவம் தொடர்பாக குளச்சல்  சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை  சந்தித்தார். அவர் கூறும்போது, “குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள்  சிலரை கைது செய்துள்ளதாக சொல்கிறார்கள். அது போதாது, சரியான குற்றவாளிகளை  கண்டுபிடித்து என்கவுன்டர் செய்ய வேண்டும். கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் பணி செய்த வில்சன் கொலை செய்யப்பட்டது, திட்டமிட்ட ஒரு நிகழ்வு போல தெரிகிறது. மறைந்த எஸ்ஐ வில்சனின் இளைய மகள் மாற்றுத்திறனாளி. அவருக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்” என்றார்.

Tags : Edappadi Kaliyakavil ,SI Wilson ,checkpoint ,Kaliyakavili , Kalyaka, SI Wilson, 1 crore scholarship, CM Edappadi
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...