×

பிலிப்பைன்சில் எரிமலை வெடிப்பு லாவா வெளியேறி வருவதால் பதற்றம்

பிலிப்பைன்ஸ்,:  பிலிப்பைன்சில் உள்ள தால் எரிமலை வெடித்து சிதறியதால் லாவா குழம்புகள் வெளியேறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பிலிப்பைன்சில் தால் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை கடந்த ஆண்டு முதல் அவ்வப்போது குமுறி வந்தது. இந்நிலையில் எரிமலை நேற்று முன்தினம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வானத்தை ெதாடும் அளவுக்கு சாம்பலுடன் கரும்புகை வெளியேறியது. இந்த கரும்புகை தலைநகர் மணிலா வரை பரவியது.

இந்நிலையில், எரிமலையில் இருந்து நேற்று முதல் நெருப்பு குழம்பான லாவா வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனால் எரிமலை அருகே இருந்த கிராம மக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். படான்காஸ் மற்றும் அருகே உள்ள கேவிட்டி மாகாணங்களில் இருந்து சுமார் 8,000 பொதுமக்கள் இதுவரை 38 நிவாரண முகாம்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. மேலும் சாம்பல் படிந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாததாலும், போதுமான போக்குவரத்து வசதி இல்லாததாலும் பலர் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். சிலர் தங்களது வீடு மற்றும் உடைமைகளைவிட்டு செல்ல மனமின்றி அங்கேயே இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து பாலேடி நகர் மேயர் வில்சன் மாராலிட் கூறுகையில், “மக்கள் திரும்ப வரவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். எரிமலை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளது குறித்து மக்களை எச்சரித்துள்ளோம்” என்றார். இதனிடையே எரிமலை வெடித்து சிதறி லாவா வெளியேறி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிலாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் 240 சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தற்காலிக விமான நிலையமாக கிளார்கில் உள்ள விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

Tags : Philippines , Philippines, volcanic eruptions, lava flows, tension
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...