×

ரத்தன் டாடா மீதான அவதூறு வழக்குகள் வாபஸ்: நஸ்லி வாடியாவுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு

புதுடெல்லி: ரத்தன் டாடா மீது தொடர்ந்த அனைத்து அவதூறு வழக்குகளையும் பாம்பே டையிங் நிறுவனத் தலைவர் நஸ்லி வாடியா திரும்ப பெற்று கொண்டுள்ளார். டாடா குழும நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து பாம்பே டையிங் நிறுவனத் தலைவர் நஸ்லி வாடியா கடந்த 2016ல் வெளியேற்றப்பட்டார். இதனால், ரத்தன் டாடா, இயக்குனர்கள் அஜய் பிரமல் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ரூ.3,000 கோடி  இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், `நஸ்லி வாடியாவை நீக்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது அவதூறு ஆகாது’ என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து வாடியா உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை கடந்த 6ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, ``தொழில்துறையில் பெரும் செல்வந்தர்களான இவ்விரு தொழிலதிபர்களும் தங்களுக்குள் சுமூகமாக பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டது. இந்நிலையில், ரத்தன் டாடா உள்ளிட்ட 10 பேர் மீது தொடர்ந்த அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்ப பெற்று கொள்வதாக நஸ்லி வாடியா தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், ``சுமூக தீர்வு காண வாடியா எடுத்த நடவடிக்கையை நீதிமன்றம் பாராட்டுகிறது’’ என்றார்.

Tags : Supreme Court ,Nasli Wadia ,Ratan Tata , Ratan Tata, defamation case, withdraw, Nasli Wadia, Supreme Court, commendation
× RELATED உடுமலை சங்கர் படுகொலை வழக்கில்...