×

நிர்பயா கொலையாளிகளுக்காக திகார் சிறையில் தூக்கு தண்டனை ஒத்திகை

புதுடெல்லி: நிர்பயா கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக முன்னேற்பாடாக, சிறையில் அதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கியெறியப்பட்டதில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவன் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று இப்போது வெளியில் உள்ளான். எஞ்சிய முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இவர்களுக்கு வரும் 22ம் தேதி தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இந்நிலையில், இவர்களில் 2 பேர் மறுசீராய்வு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகார் சிறை அதிகாரிகள் ஒத்திகை மேற்கொண்டனர். அப்போது தூக்கு கயிறு குற்றவாளிகளின் எடையை தாங்குமா? வலுவாக உள்ளதா? கீழே நகரும் பலகைகள் சரியாக செயல்படுகிறதா? என்பன போன்ற செயல்களை செய்து பார்த்தனர். இதற்காக குற்றவாளிகளின் எடை அளவில் மணல் நிரப்பப்பட்ட கோணிப் பைகளை பயன்படுத்தினர். தூக்கு தண்டனை சிறை எண் 3ல் வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்றப்படும். இதை நிறைவேற்ற மீரட்டில் இருந்து பவன் ஜல்லாட் என்ற ஊழியர் வருவதை உத்தரப் பிரதேச மாநில சிறை துறையினர் உறுதி செய்துள்ளனர். இருவரை அனுப்ப திகார் சிறை அதிகாரிகள் கேட்டிருந்தனர்.

Tags : death , Nirbhaya Murder, Dikar Prison, Hanging, Rehearsal
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...