×

கார்த்தி சிதம்பரம் வழக்கை விசாரிக்க 2 நீதிபதிகள் மறுப்பு: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சென்னை: வருமானத்தை மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்த மனுவை வேறு நீதிபதிக்கு மாற்றம் செய்யுமாறு தலைமை நீதிபதிக்கு 2 நீதிபதிகள் தனித்தனியாக பரிந்துரை செய்தனர். வருமான வரிக்கணக்கில் கடந்த 2015-16ம் ஆண்டு, முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018ல் வழக்கு தொடர்ந்தது.

சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து, ஸ்ரீநிதி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் வருமான வரிதுறை வழக்கு பதிவு செய்த போது எம்.பியாக கார்த்திக் சிதம்பரம் இல்லை. எனவே இந்த வழக்கை மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா  சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரிதுறை சார்பில் ஆஜரான வக்கீல் நீதிபதியிடம், கார்த்திக் சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ரட்ஜி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு வழக்கறிஞராக நீங்கள் ( நீதிபதி அனிதா சுமந்த்) ஆஜராகி உள்ளதால் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றம் செய்ய தலைமை நீதிபதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்தார். இதேபோல, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் மற்றொரு வழக்கை ஏற்கனவே தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு நேற்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி மூத்த வக்கீல் கே.டி.எஸ். துள்சி, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள் எம்.ஷீலா, என்.பாஸ்கரன் ஆகியோர், ‘இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை மனுதாரர் குறிப்பிடவில்லை.

மேலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு நியமிக்கப்பட்டுள்ளார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., என்பதால் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி முன்புக்கு பட்டியலிட பரிந்துரைப்பதாக நீதிபதி பி.ராஜமாணிக்கம் கூறினார்.

Tags : judges ,Karthi Chidambaram ,Chief Justice , Kārtti citamparam, vaḻakku, vicārikka, 2 nītipatikaḷ, maṟuppu
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...