×

அரசு, நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஆண்டில் 2வது முறையாக சீருடைகளின் நிறம் மாற்றம்: பெற்றோர் மத்தியில் குழப்பம்

வேலூர்: ஒரே ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2வது தடவையாக சீருடைகளில் வண்ணம் மாற்றப்பட்டிருந்தது பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 40.66 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 4 ஜோடி இலவச சீருடைகள் வழங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 2019-20ம் கல்வி ஆண்டில் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், பாவாடையும், இளம்பச்சைநிற மேல்சட்டையும் வழங்கப்பட்டது. 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சந்தனநிற பேன்ட், சந்தனநிற கட்டமிடப்பட்ட மேல்சட்டையும், மாணவிகளுக்கு சுடிதார், மேல்கோட்டும் வழங்கப்பட்டன.

மொத்தம் 4 ஜோடிகளில் ஏற்கனவே 3 ஜோடிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் திடீரென 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்கனவே கடந்த கல்வியாண்டில் மெரூன் கலரில் வழங்கப்பட்ட சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே கல்வி ஆண்டில் 2 முறை சீருடைகளின் வண்ணங்களில் மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இலவச சீருடைகள் தைத்து வழங்குவதற்கான ஒப்பந்த ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குழப்பத்தால் 2 மாதங்கள் தாமதமாகவே சீருடைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், பள்ளி முடிய 2 மாதமே உள்ள நிலையில் கடந்த கல்வி ஆண்டுக்கான சீருடைகள் வழங்கப்படுவது தங்களை குழப்பமடைய செய்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Tags : school children ,parents , Government, sponsored school, student, uniform, color change
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்