×

தேனி ஆவின் தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு விதித்த தடையை நீக்க மறுப்பு

மதுரை: தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான அம்மாவாசை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தேனி ஆவினில் விதிமுறை மீறி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ,ராஜா தலைவராகவும்,  துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அதிமுகவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் செயல்பட தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி, ஆவின் இயக்குநர், துணைப்பதிவாளர் மற்றும் தேனி ஆவின் பொதுமேலாளர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘விதிப்படி தற்காலிக உறுப்பினர்களைக் கொண்டு தலைவரை நியமிக்க முடியாது. புதிய ஆவினுக்காக நிர்வாகரீதியான பணிகள் கூட முடியவில்லை. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் நிர்வாக இயக்குநருக்கு உரியது. இவர்களாக பொதுக்குழுவை கூட்டி புதிய தலைவரை எப்படி தேர்வு செய்ய முடியும்? இந்தத் தேர்வு சட்ட ரீதியாக செல்லாது’’ என்றார். இதையடுத்து ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதிகள், அரசு மற்றும் ஓ.ராஜா தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜன. 20க்கு தள்ளி வைத்தனர்.

Tags : O. Raja ,Theni Aw Refusal ,Theni Aw , Theni, Ava leader, O. Raja, ban, refusal to remove
× RELATED சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா?...