×

ஹனூரை தனி தாலுகாவாக அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் வளர்ச்சிப்பணிகள் இல்லை : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சாம்ராஜ்நகர்: ஹனூரை தனித்தாலுகாவாக அறிவித்து இரண்டாண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் செய்யாதது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் பெரிய தாலுகாக்களில் ஒன்றாகும். தற்போது அமைச்சராக இருக்கும் ஜெகதீஷ்ஷெட்டர் முதல்வராக இருந்தபோது கொள்ளேகால் தாலுகாவில் இருக்கும் ஹனூரை பிரித்து தனி தாலுகாவாக அறிவிக்கப்படும் என அறிவித்தார். இதன் பின் முதல்வரான சித்தராமையா ஹனூரை தனி தாலுகாவாக 2018ம் ஆண்டு அறிவித்தார். தனி தாலுகா அறிவித்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தாலுகாவுக்கான எந்த வசதிகளும் இல்லை. தனி தாலுகாவாக அறிவிக்கப்–்பட்டுள்ள ஹனூரில் தமிழக எல்லையில் உள்ள கோபிநத்தம் மற்றும் பாலாறு  போன்றவை 120 கிமீ தூரத்தில் உள்ளது. ஜல்லிபாள்யா மற்றும் ஜர்கேகண்டி ஆகியவை ஹனூரில் இருந்து 60 கிமீ தூரத்தில் உள்ளது. இவ்வளவு பரப்பளவு கொண்ட ஹனூரில் காட்டு பகுதியில் மக்கள் பெரும் அளவில் வசிக்கின்றனர். தனி தாலுகாவாக அறிவித்து இரண்டாண்டுகள் முடிந்த நிலையில் ஹனூரில் தற்போது பகுதி கல்வித்துறை அலுவலகம், உதவி தாசில்தார் அலுவலகம் மட்டுமே உள்ளன. மற்ற அலுவலகங்களுக்கு பொதுமக்கள் கொள்ேளகாலுக்கு செல்லவேண்டிய அவலம் உள்ளது.

எனவே, ஹனூர் தாலுகாவில் அனைத்து துறைகளின் அலுவலகங்களை கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நரேந்திரா கூறுகையில்: பாஜ ஆட்சியில் ஹனூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அறிவிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது முதல்வர் சித்தரமையா தனி தாலுகா என அறிவித்தார். இந்த இடைப்பட்ட காலங்களில், ஹனூருக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். அவரை சந்தித்து ஹனூருக்கு வரவேண்டிய அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து செய்து கொடுக்கும்படி மனு அளிக்கப்படும் என்றார்.

Tags : Hanur ,taluk ,declaration , Two years , declaration of Hanur ,separate taluk, no developments
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...