×

வீட்டை விட்டு மகன் விரட்டியதால் கோயிலில் தங்கி உள்ளோம்: ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மனு

ராணிப்பேட்டை: வீட்டை விட்டு மகன் விரட்டியதால் கோயிலில் தங்கி உள்ளோம் என ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தாய் கண்ணீருடன் மனு அளித்தார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று காலை  நடந்தது. இதில் டிஆர்ஓ ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.பொன்னை, கீரைசாத்து, ஆவுலரங்கையபல்லி, பாலேகுப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் உள்ளது எங்கள் கிராமங்கள். நாங்கள் காட்பாடி தாலுகா அலுவலகத்திற்கு 40 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்கள் 4 கிராமங்களை காட்பாடி வட்டத்தில் இருந்து பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா மற்றும் ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும். எங்கள் கிராமங்கள் ஆந்திர மாநிலம் அருகிலும், திருவள்ளூர் மாவட்டம் அருகேயும் உள்ளதால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே இதனை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

ஆற்காடு தோப்புக்கானா வஉசி தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி புஷ்பம்மாள் அளித்த மனுவில், எனது மகன் பன்னீர்செல்வம். அவரது மனைவி லட்சுமி. இவர்கள் எங்களுக்கு சொந்தமான வீட்டில் இருந்து என்னையும், எனது கணவரையும் அடித்து துரத்தி விட்டனர். எனவே நாங்கள் இருவரும் அருகே உள்ள கங்கையம்மன் கோயில் வளாகத்தில் தங்கியுள்ளோம். மகன் தாக்கியதில் எனது கணவர் கணேசன் ஆற்காடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை எனது மகன், மருமகளோடு சேர்ந்து என்னை இரும்பு கம்பியால் சரமாரி தாக்கினார். இதனால் எனக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்க ஏற்பாடு செய்யும்படியும்,  மகன், மருமகளோடு சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.அரக்கோணம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி ஜெயமணி அளித்த மனுவில், நான் படிக்கவில்லை. எங்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். நான், எனது கணவர் போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த அவதிபட்டு வருகிறோம். எனவே காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உதவியாளர் பணி காலியாக உள்ளது. எனவே அந்த வேலையை எனக்கு அளித்து வாழ்வளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பாணாவரம் நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரவி, ஜெயமாலினியின் மகன் ஜெபக்குமார்(12) என்பவர் அளித்த மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த சவுமியாவின் தங்கை சத்யாவிற்கு ₹40ஆயிரம் கடனாக அளித்துள்ளோம். ஆனால் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டால் அடியாட்களை விட்டு மிரட்டுகின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளித்து எங்கள் பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.இன்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : office ,Ranipet Collector ,stay ,House Mother , son ,house,temple, Ranipet ,office
× RELATED வட மாநில இளைஞர்களுக்கு மட்டும் வேலை...