×

தூத்துக்குடி அருகே நள்ளிரவு சம்பவம் மின் கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த தண்ணீர் லாரி: டிரைவர் படுகாயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் தண்ணீர் லாரி, கட்டுப் பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். அதிகாரிகள் துரித நடவடிக்கையால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே மேலகூட்டுடன்காடு கிராமத்தில் ஏராள மான மக்கள் வசித்து வருகின்றனர். மங்களகிரி-செக்காரக்குடி சாலையில் வேலாயுதம் காம்பவுண்ட் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. வளைவான இப்பகுதியில் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மேல கூட்டுடன்காடு அருகே அல்லிகுளத்தில் இருந்து தண்ணீர் நிரப்பிய லாரி, முத்தையாபுரம் முள்ளக்காடு தனியார் கல்லூரிக்கு புறப்பட்டு வந்தது. மேலகூட்டுடன்காடு வேலாயுதம் காம்பவுன்ட் பகுதியில் வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை யோர மின்கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

மின்கம்பம் முறிந்து சாலையின் மைய பகுதியில் விழுந்தது. மின் வயர்கள் துண்டிக் கப்பட்டதுடன் அடுத்தடுத்து மேலும் சில மின் கம்பங்கள் விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள வீடுகள் மீதும் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தகவலறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  காயம் அடைந்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்விநியோகம் நிறுத்தப்பட்டு போக்குவரத்தும் திருப்பிவிடப்பட்டது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப் பட்டது.

வேகத்தடை அமைக்க வேண்டும்
 விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வேலாயுதம் காம்பவுன்ட் வளைவான பகுதியில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன் லாரி மோதிய விபத்தில் காளிராஜ்(50) என்பவர் இறந்தார்.  இதுபோல் ஆட்டோக்கள் மோதியதில் 2 பெண்கள் இறந்தனர். அடிக்கடி விபத்து நடப்பதால் மங்களகிரி- செக்காரக்குடி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். தற்போது தண்ணீர் லாரி மோதியதில் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை என்பதால் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மின்கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.

Tags : incident ,Tuticorin Thoothukudi , Midnight, incident ,Thoothukudi, water truck,Driver fatal
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...