×

ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி மும்பை - நாகர்கோவில் சூப்பர் பாஸ்டாக மாறுமா?: கால அட்டவணையை மாற்ற பயணிகள் கோரிக்கை

நாகர்கோவில்: தமிழகத்தில்  இருந்து தினசரி மும்பைக்கு ஆயிரகணக்கான பயணிகள் ரயிலில் பயணம்  செய்கின்றனர். குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு தொழில்  சம்மந்தமாகவும், வணிக செய்யவும்  லட்சகணக்கானோர் குடியேறி உள்ளனர். ஆனால்  தமிழகத்தில் இருந்து (சென்னை தவிர) மும்பைக்கு குறைந்த அளவே ரயில்கள்  இயக்கபட்டு வருகிறது. இதில் மும்பை - நாகர்கோவில் மார்க்கமாக இயங்கும்  ரயில்கள்  மிகவும் பிரபலமானவையாகும். நாகர்கோவில் இருந்து  திருநெல்வேலி, மதுரை, கரூர், சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக   மும்பை செல்லும் 16339-16340 ரயில் 1995ம் வருடம் வாராந்திர ரயிலாக  முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாளடைவில் பயணிகளின் அமோக வரவேற்பை  பெற்றது. இதன் காரணமாக அடுத்த வருடமே 1996ல் வாரம் 3 முறை ரயிலாக இதன் சேவை  அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1998ம் வருடம் வாரம் 4 முறை  ரயிலாக மாற்றம் செய்யப்பட்டது. என்ன காரணமோ தெரியவில்லை இன்று வரை சேவை  அதிகரிக்கப்படாமல் அப்படியே இயங்கி வருகிறது.   இதே போல் நாகர்கோவிலில்  இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி  வழியாக மும்பை செல்லும் வாரம் 2 முறை ரயில் 2000ம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது.இந்த 2 ரயில்களும்  தமிழகத்தில் இருந்து மும்பை மார்க்கமாக பயணிக்கும் போது அதாவது  நாகர்கோவிலில் இருந்து காலை புறப்பட்டு  பகல் நேரங்களில் தமிழகத்தில்  பயணிக்கிறது. இது தமிழக பயணிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. ஆனால் இந்த  ரயில்களில் மறுமார்க்கம் மும்பையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பயணிக்கும்  போது இரவு நேரமாக இயக்கபட்டு வருகிறது.

பயணிகள் மும்பையில்  இருந்து இந்த ரயில்களில் பயணிக்கும் போது இரவு நேரங்களில் தூங்கமுடியாமல்  தவிக்கும் நிலை உள்ளது. இறங்கும் இடம் எப்போது வரும் என்று காவல் இருக்க  வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரயிலில்  நிலையத்தில் இறங்கிவிட்டு  அதிகாலை வரை காவல் கிடந்து விடிந்த பிறகே சொந்த ஊர்களுக்கு பஸ்களில்  செல்லும்  அவல நிலை உள்ளது.இதனால் பெண்கள், முதியோர்,  நோய்வாய்பட்டோர், குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் ரயில்  நிலையங்களில்  மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ரயில்களில் வாரத்துக்கு 4 நாள்  மும்பை ரயில் கடந்த மாதம் ஈரோடு செல்லாமல் நாமக்கல் வழியாக வழித்தடம்  மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் வாரம் 2 முறை மும்பை செல்லும் ரயில்  திருப்பதி செல்லாமல் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டது.

2  ரயில்களும் மும்பை செல்ல அதிக பயண நேரம் எடுத்து வருகிறது. இந்த ரயில்கள்  ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய எல்.எச்.பி., பெட்டிகள்  கொண்ட ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.  அதுமட்டுமில்லாமல் இந்த ரயில்கள் அனைத்தும் நாகர்கோவிலுக்கு அதிகாலை 3.40  மணிக்கு வந்து விட்டு பராமரிப்பு பணிகளை முடித்துவிட்டு அடுத்தநாள் காலை 6  மணிக்கு தான் மும்பைக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில்கள்  சுமார் 24 மணி நேரம் பாராமரிப்பு பணிக்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில்  காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது.  ஆகவே இந்த 2 ரயில்களின் வேகத்தை அதிகரித்து சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றம்  செய்ய வேண்டும். 2 மார்க்கமும் தமிழக பகுதிகளில் பகல் நேரங்களில்  பயணிக்குமாறு மாற்றி நாகர்கோவிலுக்கு மாலை அல்லது இரவு 9 மணிக்கு முன்பாக  வந்து சேருமாறு இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள்  சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

நன்மை என்ன?
இந்த  மாற்றம் நடைமுறைக்கு வந்தால், நாகர்கோவில் - பெங்களுர் மார்க்கத்தில் பகல்  நேரத்தில் பயணம் செய்ய ஒரு ரயில் சேவை கிடைக்கும். அது மட்டுமில்லாமல்  நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அதிக நேரம் காலியாக நிறுத்தி வைப்பது  தவிர்க்கப்படும். இவ்வாறு செய்வதால் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து  புதிய ரயில்களை இயக்குவற்கான வாய்ப்புகள் உருவாகும்.



Tags : Nagercoil ,Mumbai ,Traveler , Mumbai - Nagercoil, speed train , Change Timetables
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...