×

கடலூர் மாவட்டத்தில் 19ம்தேதி கொண்டாட்டம் ஆற்று திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

பண்ருட்டி: கடலூர் மாவட்டத்தில் வருகிற 19ம்தேதி ஆற்று திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பண்ருட்டி கெடிலம் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் வருகிற 15ம்தேதி ( தை 1ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று காலை பச்சரிசி பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள்கொத்து, காய்கறிகளை படையலிட்டு கொண்டாடுவார்கள். மறுநாள் மாட்டுப்பொங்கல் நடைபெறும். மறுநாள் காணும் பொங்கல் நடக்கிறது. தொடர்ந்து 19ம்தேதி ஆற்று திருவிழா நடக்கிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பண்ருட்டி கெடிலம் ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையிலும் ஆற்று திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கெடிலம் ஆற்றில் ராட்சத ராட்டினம், பறக்கும் ரயில், விளையாட்டு கருவிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

 மேலும் ஆற்று திருவிழா அன்று விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், சிறுகிழங்கு, கரும்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பர். மேலும் கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள், களைக்கொல்லி உள்ளிட்ட விவசாய கருவிகளும், விளையாட்டுப்பொருட்கள், பேன்சி வகைகள், மாடுகளுக்கு தேவையான கயிறு, மணிகள், திருஷ்டி பொம்மைகள் போன்றவையும் அங்கு விற்பனைக்கு வைக்கப்படும். இதற்காக அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிரபல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் சுவாமிகளுக்கு ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள். அவர்கள் நீராடுவதற்கு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.
அதேநேரத்தில் கடலூர் பெண்ணையாற்றிலும் ஆற்று திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இங்கு தண்ணீர் உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி காய்கறிகள், கரும்பு, விவசாய கருவிகள், பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டுகளும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.



Tags : Cuddalore Cuddalore ,19th Celebration River Festival , Preparations , 19th, River Festival, Cuddalore
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...