×

தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட 3 பயங்கரவாதிகள் கைதான நிலையில் பெங்களூருவில் மேலும் ஒருவர் கைது

சென்னை: பயங்கரவாதிகளுக்கு செல்போன், சிம்கார்டு கொடுத்து உதவியதாக மேலும் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். பெங்களூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் இஜாஸ் பாட்ஷா என்பவரை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கொண்டு செல்ல இஜாஸ் பாட்ஷா ஓட்டுநராக இருந்து உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பயங்கரவாதிகளுக்கு உதவியதாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 7ம் தேதி கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இஜாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.    

*இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்த சுரேஷ்குமார் (48) கொலை வழக்கில் தொடர்புடைய 3  தீவிரவாதிகளுக்கு உதவிய வழக்கில் கடந்த 7ம் தேதி பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனிப் கான் (29), இம்ரான் கான் (32), முகமது சையது (24) ஆகியோரை க்யூ பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

*அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள், வரைபடங்கள், குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

*கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான காஜா மைதீன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு கொண்டு அவர்கள் ஆலோசனைபடி பெங்களூருவை தலைமையிடமாக ‘ஹல் ஹந்த்’ என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி நடத்தி வந்ததும் தெரியவந்தது.

*இந்த தீவிரவாத அமைப்புக்கு தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பலர் உறுப்பினர்களாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

*தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்த திட்டம் தீட்டியதும், அதற்கான இடங்களை தேர்வு செய்து இருந்ததும் தெரியவந்தது.

*சுரேஷ்குமார் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த காஜாமைதீன் நேபாள தலைநகர் காட்மாண்டு நகரில் தனது இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

*இந்த ஆலோசனை முடிவின்படிதான் தமிழகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்த சதி திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் பெங்களூருவில் கைதான 3 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

*அதைதொடந்து 3 தீவிரவாதிகளையும் க்யூ பிரிவு போலீசார் கடந்த 8ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

*இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் இஜாஸ் பாட்ஷா என்பவரை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : terrorists ,India ,South India , Cell Phone, SIM Card, Arrest, Bengaluru, Ijaz Baadshah, Car Driver
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...