×

நரிக்குடி அருகே நீரின்றி வாடும் நெற்பயிர்கள்: கண்மாய் வற்றியதால் விவசாயிகள் கவலை

திருச்சுழி: நரிக்குடி அருகே, கண்மாய் வற்றியதால் பாசன நீரின்றி நெற்பயிர்கள் வாடுகின்றன. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக பருவமழை பெய்ததால், கண்மாய்களில் நீர் நிரம்பின. ஆனால் திருச்சுழி, நரிக்குடி பகுதி கண்மாய்களில் மராமத்து பணி மேற்கொண்ட பின்னரும், பெரும்பாலான கண்மாய்களுக்கு போதிய நீர்வரத்து இல்லை. கண்மாய் மராமத்து பணியின்போது, வரத்துக் கால்வாய்களை சீரமைக்காமல், கரைகளை மட்டும் பலப்படுத்தியதால் மழை காலங்களில் நீர்வரத்து இல்லை. நரிக்குடி அருகே குறையறைவாசித்தான் கிராமத்தில் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் 400 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. நான்கு மடைகளைக் கொண்ட இந்தக் கண்மாயில், 2 மாதங்களுக்கு முன் பெய்த மழையால் ஓரளவு நீர்வரத்து இருந்தது. இதனை நம்பி விவசாயிகள் வயல்களில் நெல் பயிரியிட்டனர்.

சில நாட்களில் நெல் அறுவடை தயாராகும் நிலையில் கண்மாய் நீர் வற்றியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் பயிர்களை காப்பாற்ற ஒரு டிராக்டர் தண்ணீர் ரூ.800க்கு விலைக்கு வாங்கி நெற்பயிரை காப்பாற்றி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் பயிரிடப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியுமோ என்ற அச்சத்தில் கவலையடைந்துள்ளனர். இது குறித்து முத்தனேரியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் கிராம பகுதியிலுள்ள கண்மாயில் ஒரளவிற்கு நீர் வரத்து இருந்ததால், மழை தொடர்ந்து கண்மாய் நிரம்பி விடும் என்ற எண்ணத்தில் நெல் பயிரிட்டோம். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால், இருப்பு தண்ணீரை வைத்து நிலங்களில் போடப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்றி வந்ததோம்.

தற்போது கண்மாயில் முற்றிலும் நீர் வற்றியதால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் வாடி வருகின்றன. பயிர்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகிறோம். நீர் பற்றாக்குறையால் நெற்பயிர்களை காப்பாற்ற முடியாவிட்டால்  ஏக்கருக்கு ரூ.பல ஆயிரம் இழப்பு ஏற்படும்’ என்றனர்.

Tags : Nerikudi , Narikkudi, rice paddy, eyes
× RELATED மூணாறில் தீ விபத்து; 10 வீடுகள் எரிந்து...