×

சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

சித்தூர்: சித்தூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சித்தூர் உழவர் சந்தை  எதிரே  அரசுக்கு சொந்தமான நூலக சாலை உள்ளது. இதன் அருகே ஆர்டிஓ அலுவலகம், திருமலை திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபம், எம்பிடிஓ அலுவலகம் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான அலுவலகங்கள் இயங்கி வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளையும் அரசுக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

இதில் அரசு அலுவலக கட்டிடங்களுக்கும் முன் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மீது போடப்பட்ட சிமென்ட் சிலாப்களும் அகற்றப்பட்டது. ஆனால் சிலர் இழப்பீடு தராமல் கட்டிடங்களை இடிக்க கூடாது என வழக்கு தொடர்ந்தனர். இதனால் சாலை அகலப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மீது இதுவரை சிமென்ட் சிலாப் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளதால் பொதுமக்கள் துர்நாற்றத்தால் சிக்கித்தவித்து வருகின்றனர். எனவே, இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து அவற்றின் மீது சிமென்ட் சிலாப் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Open Sewer Canal ,Chittoor-Vellore National Highway Sewer Canal ,Chittoor-Vellore National Highway , Chittoor-Vellore, National Highway, Sewer Canal
× RELATED சித்தூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலை...